Tuesday, June 2, 2015
எனக்கு எப்பவுமே செல்ல ப்ராணிகள்ன ஒரு அலர்ஜி..ஒரு முறை நான் கடைக்குப் போன போது ஒரு அம்மணி தன் ப்ரிய நாயையும் கடைக்கு கூட்டி வந்திருக்கிறாள் .. நான் சாமான் வாங்கிட்டு திரும்பினா கால் கிட்ட நாய், நான் அலறினவுடன, "ஜுஜு .. ஆன்டி பயப்படராங்க பாரு.. இங்க வந்துடு .." ஜுஜு என்னை தொல்லை பண்ணாமல் போனாலும் அதுக்கு ஆன்டியான கடுப்பு எனக்கு..
இன்னொரு நாள், கார்த்தால வாசல் தெளிக்கப் போனா, கண்ணுக்குட்டி ஸைஸுக்கு ஒரு நாய் வேகமா என்னை நோக்கி ஓடி வர, நான் அலறிய அலறலில் அக்கம்பக்கத்தில் நாலஞ்சு ஜன்னல் திறந்து மூடின ... சரியா அது எனக்கு அரை அடி முன்னால வரச்ச, டைகர்னு அதனுடைய வளர்ப்பன் கொடுத்த குரலுக்கு அப்படியே நின்னது... உசிர் போய் உசிர் வந்தது.. பயமும் கோபமும் டைரெக்ட்லி ப்ரொப்போஷனலா, அதனால் செமையா கத்தி விட்டேன் அந்தாள , கயிறு போட்டு நாயை கட்டாதத்துக்கு... "பாக்கத்தாங்க பெருசு.. அது கொழந்தங்க.. ஒண்ணும் செய்யாது"செய்யுமோ செய்யாதோ .. என் பக்கத்துல வரப்டாது ...
ஆனா என் மகனுக்கு எதாவது ஒரு ஜீவன எடுத்துண்டு வந்து வளக்கனும்னு ஒரே ஆசை.. பன்னி, நாய், பூனை, முயல், கிளி எல்லாம் கேட்டுப் பார்த்தான்... நானா அலவ் பண்ணுவேன்...
போன மாசம், வொயிட் வாஷ் பண்ணும்போது, ஒரு வீட்டு சாமானையும் ஒரு ரூம்ல போட்டு வச்சுருந்தோம்... எல்லா சாமானுடனும் மளிகை சாமானும் உண்டு.. அதனால், பொழக்கத்தில்தான் அந்த ரூமை வைத்திருந்தோம்.. எப்பாவோ கெடச்ச கேப்ல ஒரு பூனை தன்னுடைய குட்டியுடன் கட்டிலில் சாமான்களுடன் சாமானாய் ஏறி உட்கார்ந்திருக்கு.. எதையோ எடுக்கப் போன என் கணவர், "அந்த ரூம்ல பூனை இருக்கு"நான் நம்பல .. "இப்பத்தானே நான் அங்க போய் ப்ளேட்லாம் வச்சுட்டு வந்தேன்"ரூமுக்குள்ளே இருந்த மகளுக்குத் தெரியாமல் எட்டி பார்த்து உறுதி செய்த பின், அவளை வெளியே கூப்டு விஷயம் சொன்ன உடனே அலறினாள் .. எங்க மூணு பேருக்குமே டென்ஷன்....இவ்வளவு சாமானுக்கு நடுவுல இத எப்படி வெளிய தொரத்தறது...
அப்பத்தான் வெளில போயிருந்த அபு (மகன்) வந்தான்.. விஷயத்த சொன்ன உடன, ஆயிரம் வாட்ஸ் பல்ப் மொகத்துல.. எங்க எங்கன்னு ஆசையா போய் பார்த்தான்... அம்மா ஸோ ஸ்வீட் மா.. இங்கயே இருக்கட்டும்மா "டேய் ஏற்கனவே ரூம் நிறைய சாமான்.. உனக்குத்தான் பயம் இல்லல்ல .. அதைக் கொண்டு போய் மொதல்ல வெளில விடுடா .."உள்ள போனான்.. கொஞ்ச நேரத்துல வந்து, ஒரு ப்ளாஸ்டிக் கவரும் ஒரு அட்டை டப்பாவும் கேட்டான்.."பெரிய பூனை கொஞ்சம் அக்ரஸிவா இருக்கு.. அதான் க்ளவுஸ் மாதிரி இந்த கவர போட்டுக்கபோறேன்"உள்ள போய் கதவ சாத்திண்ட்டான்... அஞ்சு நிமிஷம் போறதுக்குள்ளே அரை மணி ஆன மாதிரி ஆய்டுத்து... அப்பூன்னு கொரல் கொடுத்தவுடன வெளில வந்தான்"குட்டிய வேகமா கைல எடுத்தா அது ஹர்ட் ஆயிடும்னு மெதுவா பார்த்து எடுக்கறச்ச அந்த பெரிய பூனை வந்து அத வாயில கவ்விண்டு கட்டிலுக்கு அடில போய்டுத்து.... கேக்கவே எனக்கு டென்ஷன்.."என்னடா பண்றது இப்ப"இரும்மா என்று உள்ளே சென்றவன் கொஞ்ச நேரத்தில் வாயில் புன்னகை, பெட்டியில் பூனைக்குட்டியோடு வந்தான்.."எப்டிடா" "கம்ப வச்சு லேசா சவுண்டெழுப்பினப்ப, பெரிய புனை பயந்து ஜன்னல் வழியா போய்டுத்து.. அப்புறம் இத தூக்கிண்டு வந்துட்டேன்..""சரி சரி மொதல்ல கொண்டு போய் அத வெளில விட்டுட்டு வா"அவனிடம் சொல்லியபடியே, எல்லா ஜன்னல் கதவுகளையும் சாத்தினேன்..."என்னடா இன்னும் போலியா"" இந்த குளிர்ல போய் அத வெளில விடனுமா"புலம்பியபடியே விருப்பமில்லாமல் அதை வெளியே விட்டுட்டு வந்து ஏம்மா இவ்வளவு க்ரூயலா இருக்கன்னு கேட்டுட்டு போய்ட்டான்."
தெர்ல... என்னால வேற மாதிரி இருக்க முடியல
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment