Saturday, September 5, 2009

அரசாங்க உத்யோகம்

ஏற்கனவே தெரிந்தவர்கள், புதிதாக அறிமுகமானவர்கள் எல்லோரும் என்னிடம் கேட்கும் கேள்வி - கவர்ன்மெண்ட் வேலையைப் போய் ஏன் விட்டீங்க?

நான் கூட ரொம்ப ஆசையாத்தான் போய் வேலையில் சேர்ந்தேன். முதல் நாளே பயங்கர காமெடி. நான் இதற்கு முன் தனியாரிடம் வேலை செய்ததால், பத்து மணி ஆபிஸுக்கு ரொம்ப சரியாக ஒன்பதே முக்காலுக்கே போய் விட்டேன். செக்யூரிடி கார்ட் என்னை விசாரித்து நிர்வாகப் பிரிவில் உட்கார வைத்து விட்டு சென்று விட்டார்.

பத்தரை மணிக்கு மேலே ஒவ்வொருவராக வந்தனர். அந்த செக்‌ஷனில் மொத்தம் நான்கு பேர். (ஹெட் க்ளார்க்கையும் சேர்த்து) அதில் ஒருவர் வந்தவுடன் என்னம்மா என்று என்னிடம் விசாரித்து விட்டு தன்னுடய இடத்துக்கு சென்று தன்னுடைய டேபிள், சேரை எல்லாம் நன்றாக துடைத்து விட்டு, ரெண்டு ஊதுபத்தியை ஏற்றி குண்டூசி ஸ்டாண்டில் சொருகி வைத்து விட்டு, டேபிள் கண்ணாடியின் கீழ் உள்ள சாமியைக் கும்பிட்டு விட்டு (ஒரு ஐந்து நிமிட ப்ரேயர்),
“என்னப்பா விஷயம் இன்னிக்கி” என்று பக்கத்தில் இருப்பவரிடம் அளவளாவி விட்டு நிமிர்ந்த போது மணி பதினொன்றரை. பிறகு பத்து நிமிடத்துக்கு உபயோகப்படாத ஒன் சைட் பேப்பரை 1இன்ச் அகலம், 4இன்ச நீளத்திற்கு கட் பண்ணி வைத்துக் கொண்டார். (பின்னால் தெரிந்து கொண்டது அது உயரதிகாரிகளுக்கு கோப்புகளை அனுப்பும் போது அடையாளத்துக்கு வைக்க பயன் படும் என்று).

அடுத்து, “ ரொம்ப டயர்டா இருக்குப்பா. ஒரு டீ குடிச்சுட்டு வரலாம்”.
நான் ஒருவரைப் பற்றி மட்டும் சொன்னதால் மற்றவர்கள் வேலை செய்தார்கள் என்று அர்த்தம் இல்லை. 12மணிக்கு மேலே என்னுடய அப்பாயின்மெண்ட் ஆர்டரை ஒரு பேப்பரில் எழுதிக் கொடுத்து என்னை டைப் அடித்து கொண்டு வர சொன்னார்கள். அந்தப் பிரிவில் எனக்கு டைப் அடிக்கும் வேலை தான் கொடுக்கப் பட்டது. மத்தியானமும் கொஞ்சம் கொஞ்சம் தான் வேலை செய்தார்கள். இதுல சுப்பர் காமெடி என்னன்ன அவங்க எல்லாம் ஓவர் டைம் வேலை செய்ததற்கான பணமும் வாங்குவார்கள். அங்கு எனக்கு எவ்வளவு வேலை இருக்கும் என்று புரிந்து போயிற்று.

மறுநாள் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, ” எனக்கு அக்கவுண்ட்ஸ் செக்‌ஷனில் வேலை கிடையாதா “ என்று கேட்டேன். நான் ஏதோ கேட்க கூடாததை கேட்ட மாதிரி, “ அதெல்லாம் சீனியாரிட்டி படிதான் கிடைக்கும்.”
என்னவோ தெரியவில்லை அங்கு வேலை பார்த்த பத்து வருடத்தில் நான் சீனியராகவே ஆகவில்லை. வைரமுத்து ஸ்டைல்ல சொல்லனும்ன,

வருடா வருடம் சீட் சேஞ்ச் கேட்டேன்
புத்திசாலியான உயரதிகாரி கேட்டேன்
மூளைக்கு கொஞ்சம் வேலை கேட்டேன்
தனியாய் எனக்கு கப் போர்ட் கேட்டேன்
குறைந்த பட்சம் நல்ல டேபிள் கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை

மொத்தத்துல ஒரு நல்ல working environment, job satisfaction ரெண்டுமே இல்லாததால வேலையை விட்டேன். மற்ற காரணங்கள் இரண்டாம் பட்சம். கால் காசுனாலும் கவர்ன்மெண்ட் உத்யோகம்ங்கிறதெல்லாம் அபத்தமாப் பட்டது.

நான் இதற்கு முன் வேலை செய்த தனியார் கம்பெனியில் நான் தான் அக்கவுண்ட்ஸ் இன்சார்ஜ். நல்ல மரியாதையும் இருந்தது. இங்கு ஒன்றுமே இல்லை.

நான் பண்ணிய மடத்தனம் என்னன்ன அங்கேயே இருந்து ஓய்வு நேரங்களில் (அதான் நிறைய கிடச்சதே) என்னுடைய பாடங்களை படித்து icwa final முடிக்காததுதான். என்ன பண்றது வேலைக்குப் போவதில் இருந்த interest படிக்கரதுல இல்லாம போச்சு.

Thursday, September 3, 2009

ப்ரேக்கா ஆக்ஸிலரேட்டரா ????????

சமீபத்தில் என்னை டிஸ்டர்ப் பண்ணிய ஒரு செய்தி....
ஒரு இளம் சாஃப்ட்வேர் எஞ்சினியர் புதியதாக கார் வாங்கி விட்டு வீட்டுக்கு எடுத்து வந்திருக்கிறார். புது காரைப் பார்த்தவுடன் அவருடைய ஐந்து வயது குழந்தை வீட்டிலிருந்து காரை நோக்கி வந்திருக்கிறது. குழந்தை காரின் அருகே வருவதைப் பார்த்து காரை நிறுத்த எண்ணியவர் பதட்டத்தில் ப்ரேக்குக்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை மிதித்திருக்கிறார். குழந்தை ஸ்பாட்ல உயிர் இழந்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்னால் இதே மாதிரி இன்னொரு நிகழ்வு. ஸ்கூல் அருகே. புதிதாக கார் ஓட்டக் கற்றுக் கொண்ட ஒருவர் இதே மாதிரி மாற்றி ஆக்ஸிலேட்டரை மிதித்ததில் ஸ்கூல் குழந்தைகள் வந்த ஆட்டோவில் மோதியதில், மற்றவர்களுக்கு சிறிய அடியும், ஒரு குழந்தைக்கு மட்டும் ஒரு காலை எடுக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.


எட்டு வருடங்களுக்கு முன்னாலேயே கார் ஒட்டக் கற்றுக்கொண்டு லைசென்ஸ் வாங்கி வைத்திருக்கிறேன். ஆனால் தனியாக காரை எடுக்கும் சந்தர்ப்பமே வருவதில்லை. குடும்பத்துடன் செல்லும் போது வீட்டுக்கா(ர)ரே ஒட்டிடறார். அப்பப்ப கேட்டு விட்டுட்டேன். எல்லாரும் சொல்வாங்க டூ வீலர விட கார் ஓட்றது சேஃப்னு. ஆனா இந்த ந்யூஸ்லாம் படிக்கும் போது டூ வீலர் பெட்டர்ப்பா. டூ வீலரில் இந்த குழப்பம் இல்லை. நம்ம சேஃப்டிய விட மத்தவங்க சேஃப்டி ரொம்ப முக்கியம்.