Monday, December 21, 2009

என்னுடய வீட்டிற்கு அருகே ஒரு காலி மைதானம் இருக்கிறது. ஒரு இடம் காலியாக இருந்தால் நம் மக்கள் என்ன செய்வார்கள் என்பது தெரிந்ததுதானே. குப்பை கொட்டுவது முதல் முடிந்த எல்லா வகைகளிலும் அதை சுகாதாரமற்றதாக ஆக்கி விட்டார்கள். அதன் அருகில் க்ளினிக் வைத்திருக்கும் டாக்டர் கூட அந்த மைதானத்தின் அந்த நிலைக்கு தன்னாலான பங்கை அளித்து வந்தார். (எப்படி ஒரு டாக்டர் ஒரு சுகாதாரமற்ற ஒரு நிலையை விரும்புகிறார் என்று புரியவில்லை).

ஆறு மாதத்திற்கு முன்னால் இரண்டு ஹிந்தி பேசும் பையன்கள் (18-20 வயது இருக்கும்) வந்தார்கள். ஒரு தள்ளு வண்டியில் பானி பூரி, சன்னா சமோசா, பளபளவென்றிருக்கும் ஜிலேபி மற்றும் இதர ஐட்டங்களுடன் மைதானமருகில் கடை விரித்தாயிற்று. தினமும் மதியம் 2 மணி முதல் இரவு எட்டு, ஒன்பது மணி வரை கடை நேரம். இரண்டே மாதங்களில் நல்ல பிக் அப். பக்கத்தில் உள்ள மாலில் வேலை செய்யும் பையன்கள், பெண்கள், பள்ளி விட்டு அந்த வழியே செல்லும் குழந்தைகள், ஆட்டோ காரர்கள் என பல தரப்பட்ட கஸ்டமர்கள். எனக்கு அதைப் பார்த்தால் கோபம் கோபமாக வரும். என்ன மக்கள், யார் எங்க, என்ன கடை போட்டாலும் வாங்குவார்களா? மைதானமே ஒரு தவறான சாய்ஸ் கடை போட அதிலும் அதைத் தாண்டி போகும் வாகனங்கள் கிளப்பும் புகை மற்றும் புழுதி. (எல்லா உணவுப் பண்டங்களும் திறந்துதான் இருக்கும்).

ஆரம்பத்தில் நான் அந்த வழியாகப் போகும் போது அவர்களை முறைத்துக் கொண்டுதான் போவேன். என்னுடய பெண் சொல்வாள், “ தேவையில்லாத வம்பை விலைக்கு வாங்காதே” என்று. என்னுடய கவலையே வம்பு பண்ண எனக்கு தைரியம் இல்லாததுதான்.
இதை எல்லாம் தடுக்க வேண்டும் என்று மனதில் தோன்றுவதை செயல் படுத்த தெரியவும் இல்லை, துணிச்சலும் இல்லை. நாட்டுல நிறைய பேர் என்ன மாதிரிதான் இருக்காங்கன்னு நினைக்கிறேன்.

இரண்டு நாட்களுக்கு முன்னால் அவனிடம் ’ஒரு மசால் வடை கொடு’என்று கேட்டேன். லேசான கேலி புன்னகையுடன் “சாப்டவா, பார்சலா” என்றான்.
”பார்சல்தான், எலிப் பொறியில் வைக்க”

Saturday, September 5, 2009

அரசாங்க உத்யோகம்

ஏற்கனவே தெரிந்தவர்கள், புதிதாக அறிமுகமானவர்கள் எல்லோரும் என்னிடம் கேட்கும் கேள்வி - கவர்ன்மெண்ட் வேலையைப் போய் ஏன் விட்டீங்க?

நான் கூட ரொம்ப ஆசையாத்தான் போய் வேலையில் சேர்ந்தேன். முதல் நாளே பயங்கர காமெடி. நான் இதற்கு முன் தனியாரிடம் வேலை செய்ததால், பத்து மணி ஆபிஸுக்கு ரொம்ப சரியாக ஒன்பதே முக்காலுக்கே போய் விட்டேன். செக்யூரிடி கார்ட் என்னை விசாரித்து நிர்வாகப் பிரிவில் உட்கார வைத்து விட்டு சென்று விட்டார்.

பத்தரை மணிக்கு மேலே ஒவ்வொருவராக வந்தனர். அந்த செக்‌ஷனில் மொத்தம் நான்கு பேர். (ஹெட் க்ளார்க்கையும் சேர்த்து) அதில் ஒருவர் வந்தவுடன் என்னம்மா என்று என்னிடம் விசாரித்து விட்டு தன்னுடய இடத்துக்கு சென்று தன்னுடைய டேபிள், சேரை எல்லாம் நன்றாக துடைத்து விட்டு, ரெண்டு ஊதுபத்தியை ஏற்றி குண்டூசி ஸ்டாண்டில் சொருகி வைத்து விட்டு, டேபிள் கண்ணாடியின் கீழ் உள்ள சாமியைக் கும்பிட்டு விட்டு (ஒரு ஐந்து நிமிட ப்ரேயர்),
“என்னப்பா விஷயம் இன்னிக்கி” என்று பக்கத்தில் இருப்பவரிடம் அளவளாவி விட்டு நிமிர்ந்த போது மணி பதினொன்றரை. பிறகு பத்து நிமிடத்துக்கு உபயோகப்படாத ஒன் சைட் பேப்பரை 1இன்ச் அகலம், 4இன்ச நீளத்திற்கு கட் பண்ணி வைத்துக் கொண்டார். (பின்னால் தெரிந்து கொண்டது அது உயரதிகாரிகளுக்கு கோப்புகளை அனுப்பும் போது அடையாளத்துக்கு வைக்க பயன் படும் என்று).

அடுத்து, “ ரொம்ப டயர்டா இருக்குப்பா. ஒரு டீ குடிச்சுட்டு வரலாம்”.
நான் ஒருவரைப் பற்றி மட்டும் சொன்னதால் மற்றவர்கள் வேலை செய்தார்கள் என்று அர்த்தம் இல்லை. 12மணிக்கு மேலே என்னுடய அப்பாயின்மெண்ட் ஆர்டரை ஒரு பேப்பரில் எழுதிக் கொடுத்து என்னை டைப் அடித்து கொண்டு வர சொன்னார்கள். அந்தப் பிரிவில் எனக்கு டைப் அடிக்கும் வேலை தான் கொடுக்கப் பட்டது. மத்தியானமும் கொஞ்சம் கொஞ்சம் தான் வேலை செய்தார்கள். இதுல சுப்பர் காமெடி என்னன்ன அவங்க எல்லாம் ஓவர் டைம் வேலை செய்ததற்கான பணமும் வாங்குவார்கள். அங்கு எனக்கு எவ்வளவு வேலை இருக்கும் என்று புரிந்து போயிற்று.

மறுநாள் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, ” எனக்கு அக்கவுண்ட்ஸ் செக்‌ஷனில் வேலை கிடையாதா “ என்று கேட்டேன். நான் ஏதோ கேட்க கூடாததை கேட்ட மாதிரி, “ அதெல்லாம் சீனியாரிட்டி படிதான் கிடைக்கும்.”
என்னவோ தெரியவில்லை அங்கு வேலை பார்த்த பத்து வருடத்தில் நான் சீனியராகவே ஆகவில்லை. வைரமுத்து ஸ்டைல்ல சொல்லனும்ன,

வருடா வருடம் சீட் சேஞ்ச் கேட்டேன்
புத்திசாலியான உயரதிகாரி கேட்டேன்
மூளைக்கு கொஞ்சம் வேலை கேட்டேன்
தனியாய் எனக்கு கப் போர்ட் கேட்டேன்
குறைந்த பட்சம் நல்ல டேபிள் கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை

மொத்தத்துல ஒரு நல்ல working environment, job satisfaction ரெண்டுமே இல்லாததால வேலையை விட்டேன். மற்ற காரணங்கள் இரண்டாம் பட்சம். கால் காசுனாலும் கவர்ன்மெண்ட் உத்யோகம்ங்கிறதெல்லாம் அபத்தமாப் பட்டது.

நான் இதற்கு முன் வேலை செய்த தனியார் கம்பெனியில் நான் தான் அக்கவுண்ட்ஸ் இன்சார்ஜ். நல்ல மரியாதையும் இருந்தது. இங்கு ஒன்றுமே இல்லை.

நான் பண்ணிய மடத்தனம் என்னன்ன அங்கேயே இருந்து ஓய்வு நேரங்களில் (அதான் நிறைய கிடச்சதே) என்னுடைய பாடங்களை படித்து icwa final முடிக்காததுதான். என்ன பண்றது வேலைக்குப் போவதில் இருந்த interest படிக்கரதுல இல்லாம போச்சு.

Thursday, September 3, 2009

ப்ரேக்கா ஆக்ஸிலரேட்டரா ????????

சமீபத்தில் என்னை டிஸ்டர்ப் பண்ணிய ஒரு செய்தி....
ஒரு இளம் சாஃப்ட்வேர் எஞ்சினியர் புதியதாக கார் வாங்கி விட்டு வீட்டுக்கு எடுத்து வந்திருக்கிறார். புது காரைப் பார்த்தவுடன் அவருடைய ஐந்து வயது குழந்தை வீட்டிலிருந்து காரை நோக்கி வந்திருக்கிறது. குழந்தை காரின் அருகே வருவதைப் பார்த்து காரை நிறுத்த எண்ணியவர் பதட்டத்தில் ப்ரேக்குக்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை மிதித்திருக்கிறார். குழந்தை ஸ்பாட்ல உயிர் இழந்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்னால் இதே மாதிரி இன்னொரு நிகழ்வு. ஸ்கூல் அருகே. புதிதாக கார் ஓட்டக் கற்றுக் கொண்ட ஒருவர் இதே மாதிரி மாற்றி ஆக்ஸிலேட்டரை மிதித்ததில் ஸ்கூல் குழந்தைகள் வந்த ஆட்டோவில் மோதியதில், மற்றவர்களுக்கு சிறிய அடியும், ஒரு குழந்தைக்கு மட்டும் ஒரு காலை எடுக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.


எட்டு வருடங்களுக்கு முன்னாலேயே கார் ஒட்டக் கற்றுக்கொண்டு லைசென்ஸ் வாங்கி வைத்திருக்கிறேன். ஆனால் தனியாக காரை எடுக்கும் சந்தர்ப்பமே வருவதில்லை. குடும்பத்துடன் செல்லும் போது வீட்டுக்கா(ர)ரே ஒட்டிடறார். அப்பப்ப கேட்டு விட்டுட்டேன். எல்லாரும் சொல்வாங்க டூ வீலர விட கார் ஓட்றது சேஃப்னு. ஆனா இந்த ந்யூஸ்லாம் படிக்கும் போது டூ வீலர் பெட்டர்ப்பா. டூ வீலரில் இந்த குழப்பம் இல்லை. நம்ம சேஃப்டிய விட மத்தவங்க சேஃப்டி ரொம்ப முக்கியம்.

Thursday, August 20, 2009

அரங்கன் உலா







ஸ்ரீவேணுகோபாலனின் திருவரங்கன் உலா மற்றும் இரண்டாம் பாகமான மதுரா விஜயம் படித்தேன். புஷ்பா தங்கதுரை வேணுகோபாலனாக அவதாரம் எடுத்து நல்ல விஷயங்களை எழுதியிருக்கிறார்.

14ம் நூற்றண்டில் சுல்தானியர் படையெடுப்பின் போது அரங்கனை, பக்தர்கள் பல இடங்களுக்கும் எடுத்துச் சென்று பல அல்லல்களுக்கு நடுவே மீண்டும் அரங்கம் கொண்டு வந்து சேர்த்த சரித்திர நிகழ்வை மையமாக வைத்து எழுதியிருக்கிறார். முஸ்லிம் படையெடுப்பின் போது நமது பல கோவில்கள் சின்ன பின்னா படுத்தப் பட்டதைப் பற்றி சரித்திரத்தில் படித்து இருக்கிறோம். பல வருடங்கள் ஸ்ரீரங்கத்தில் இருந்ததால் எனக்கு அரங்கனிடம் தனி பிடிப்பு உண்டு . எனக்கு மிகவும் பரிச்சயமான ஸ்ரீரங்கம் கோயிலைப் பற்றிய நூல் என்பதால் மிகவும் ஆர்வத்துடன் படித்தேன். ஸ்ரீ.வே ஏமாற்றவில்லை.



















சுல்தானியர் படையெடுப்பை அறிந்து பிள்ளைலோகாச்சாரியார் தலைமையில் ஒரு குழுவினர் எம்பெருமானின் உத்ஸவ மூர்த்தியுடன் தெற்கே செல்கின்றனர். ஸ்ரீமான் வேதாந்த தேசிகர் தலைமையில் அரங்கனுடய மூல விக்ரகத்தை மறைத்து செங்கலால் சுவர் எழுப்பப் படுகிறது. உத்ஸவ மூர்த்தியுடன் சென்றவர்கள் காட்டு வழியாக செல்லும் போது பல இல்லல்களுக்கு ஆளாகிறார்கள். பிள்ளைலோகாச்சாரியார் வழியில் ப்ராணன் விடுகிறார். மற்றவர்கள் விக்ரகத்துடன் மதுரை சென்று அங்கு அழகர் மலையில் சில காலம் இருக்கிறார்கள். இவ்வாறு ஒவ்வொறு இடமாக சென்று கடைசியில் மைசூர் அருகே உள்ள மேல்கோட்டைக்குச் சென்று அங்கு 18 வருடங்கள் இருக்கிறார்கள்.
பிறகு சத்தியமங்கலம் வந்து, அங்கிருந்து சுல்தானியர்களுக்கு பயந்து மீண்டும் மேல்கோட்டை சென்று கடைசியில் திருப்பதி நோக்கி பயனிக்கிறார்கள். அரங்கனுடன் செல்பவர் எண்ணிக்கை இப்பொழுது ஐந்தாக குறைந்திருக்கிறது. அதில் மூவர் இறந்திட, ஒருவர் பிரிந்திட, ஒருவர் மட்டும் திருப்பதி மலையில் காணாமல் போய் விடுகிறார். பத்தொன்பது வருடங்களுக்கு பிறகு அவரையும் அரங்கனையும் திருப்பதி மலையிலுள்ள காடுகளில் கண்டு பிடித்து மேலும் பத்து வருடங்கள் கழித்து விஜய நகர அரசர்களின் உதவியுடன் சுல்தானியர்களை தோற்கடித்து திருவரங்கத்தை கைப்பற்றி அரங்கனை அவருடைய கோயிலில் கொண்டு வந்து சேர்க்கிறார்கள். அப்போது நூற்றியிரண்டு ப்ராயம் அடைந்திருந்த வேதாந்த தேசிகரை வரவழைத்து அவரால் மூலவருக்கு முன் எழுப்பப்பட்ட சுவரை திறக்க வைக்கிறார்கள். நித்திய பூஜைகள் அன்று முதல் தொடங்கப் படுகின்றன.

நான் சிறு
வயதில் ஓடி விளையாடிய கோயில். சற்று பெரியவளானவுடன் அரங்கனின் அழகையும், கோயிலில் கொண்டாடப்படும் பல உத்ஸவங்களையும் மிகவும் அநுபவித்திருக்கிறேன். இப்போதும் வருடத்தில் இரண்டு மாதங்கள் எங்களுடைய வீதி வழியாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளும் பெருமாளை தரிசிக்க முடியாமைக்கு வருத்தப்படுகிறேன். இந்த நூலைப் படித்து முடித்த பின் உடனே அங்கு செல்ல ஆவலாக இருக்கிறது. நான் அங்கு இருந்த வரை கூடிய வரை தவறாமல் செல்லும் உத்ஸவம் வைகுண்ட ஏகாதசி இராப்பத்து சமயங்களில் இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து பெருமாள் சன்னதிக்கு எழுந்தருள்வதும் அங்கு ஏகாந்த வீணையும், பங்குனி உத்திரத்தின் போது தாயரும் பெருமாளும் சேர்ந்து இருப்பது, யானை மற்றும் குதிரை வாஹனங்கள், தேர் (இவை மூன்றும் என் வீட்டின் வாசலிலேயே கிடைக்கும் தரிசனங்கள்).
இது பற்றிய நினைவு வரும் போது நான் இங்கே செல்வது உண்டு.

Wednesday, May 27, 2009

பள்ளி ஆண்டு விழா

சிறு வயதில் அதிகமாக பள்ளி ஆண்டு விழாக்களில் கலந்து கொண்ட நினைவு இல்லை. 5ம் வகுப்பு படிக்கும் போது ஒரு டான்ஸ் ஆடின ஞாபகம். அதற்கு இன்று வரை உடன் பிறப்புகள் கேலி செய்து கொண்டிருப்பது வேறு விஷயம். (அதை யாருமே வீட்டிலிருந்து வந்து பார்க்கவில்லை. நான் பெருமையாக நினைத்து சொன்ன விஷயங்களை வைத்து என்னை ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள்).

இப்ப என் பசங்க பள்ளியில் ஆண்டு விழாவை ஷங்கர் பட ரேஞ்சிற்கு பிரம்மாண்டமாக கொண்டாடுகிறார்கள். ஒரு நிகழ்ச்சிக்கு குறைந்த பட்சம் 100 குழந்தைகள் எடுத்துக்கொள்வார்கள். பைட் பைபெர் கதைக்கு எக்கச்சக்க எலி.நம்ம சேர்க்கு அடிலேர்ந்து எல்லாம் எலி (L.KG, U.K.G எலி).

என்னுடய பெண் மூன்றாவது படிக்கும் போது ஆண்டு விழாவில் சேரனும்னு சொன்னப்ப விவரம் புரியாம சரி சொல்லிட்டேன். கிருஷ்ணர் பிறந்த உடன் வசுதேவர் யமுனை நதியை கடந்து செல்லும் காட்சியில் நதியாக இவளையும் சேர்த்து 100 குழந்தைகள்.எல்லாம் நீலமாக மாறியிருந்தன. இதில் கஷ்டப்பட்டு இவளைக் கண்டு பிடித்து ப்ரோக்ராம் முடிந்தவுடன் ,

"லாஸ்ட் ரோல ரைட்ல ரெண்டவதா நீ இருந்தியே நான் பக்கத்துல ஆன்டிக்கு கூட காண்பிச்சேன்"

"நான் செகன்ட் ரோல இருந்தேம்மா"(அவளுடய முகத்தை பார்க்க கஷ்டமாக இருந்தது) இதற்கு 15 நாட்களாக அலைச்சல் வேறு. .அதனால் அடுத்த வருடத்தில் இருந்து இதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டேன். அந்த ஆண்டு விழாவின் போது எடுத்த போட்டோ நான் எதிர்பார்த்தபடியே ஒளித்து வைக்கப்பட்டது.

அடுத்து ஐயாவோட turn. என்னோட instructions மீறி

"அம்மா என்னை annual day க்கு செலெக்ட் பண்ணிட்டாங்க"

"அதெல்லாம் முடியாது consent letter கொடுக்க மட்டேன்" (ஆமாம் நம்மிடம் எழுத்து மூலமாக ஒப்புதல் கேட்பார்கள்)

"என்னை என்ன பண்ண சொல்ர. அவங்க என்னிய jungle book la வர sherkhan மாதிரி நடிக்க சொன்னாங்க. நான் நடிச்சு காமிச்சேன். எல்லாரும்clap பண்ணி இந்த role க்கு நான் தான் best னு சொல்லிட்டங்க. எனக்கு தெரியாது. நீயே வேணா மேம் கிட்ட கேட்டுக்கோ"

"சும்மா ஒரு நிமிஷம் வரதுக்கெல்லாம் செலவும் பண்ணி அலையவும் முடியாது"

"உனக்கு தெரியுமா sherkhan dhan வில்லன். நெறய நேரம் வரும்" (அவனுக்கு நான் cartoon ரொம்ப பார்ப்பதில்லை என்ற வருத்தம் உண்டு)

"நான் வந்து school ல பேசுவேன்"

"சரி" (கண்ணில் மெல்லிய சோகம், பயம், எல்லாத்தயும் இவ வந்து கெடுக்க போறான்னு)

பள்ளிக்குச் சென்று அந்த டீச்சரை பார்த்து பேசினேன். அவள், இவ்வாறுselect ஆவது எவ்வளவு பாக்கியம் என்றும், அவள் டீச்சராக இருந்தும் அவளுடய பையனுக்கு 3 வருடங்களாக வாயிற்காப்போன் போன்ற ரோல் தான் கிடைப்பதாகவும் என் பையனிடம் கிடைத்தற்கரிய திறமை மறைந்திருப்பதாகவும், அவனுடய மகிழ்ச்சியை நான் கெடுப்பதாகவும் இத்யாதி, இத்யாதி..........

எல்லாம் கப்சா, ஆள் கிடைக்கணும் இல்லயா. என்ன பேசினால் அம்மாக்கள் விழுவார்கள் என்று பேசும் பேச்சு. நான் அதில் விழவில்லை. ஆனால் அவளிடம் தொடர்ந்து பேசி புரிய வைக்கும் பொறுமை இல்லததால் ஒப்புக் கொண்டேன். என் பேச்சை அவள் கேட்பதாகவும் இல்லை. இவ்வளவு buildup கொடுக்கப்பட்ட sherkahanம் ஒரு நிமிடம்தான் வந்தான். இதில் ட்ரெஸ் ரிகர்சல், மெயின் ப்ரொக்ராம்னு ரெண்டு நாள். பள்ளிஎங்கள் வீட்டில் இருந்து 3கி.மீ ப்ரொக்ராம் நடந்தது 10கி.மீ தள்ளி இருந்த ஒரு அரங்கில். பயங்கர லொள்ளு. என் அருமை புத்திரன் முகத்தில் புன்னகையுடன் ஆண்டு விழா இனிதே முடிந்தது.

Wednesday, April 15, 2009

மூன்று வாரங்களுக்கு முன்னால் பெண்ணை பள்ளியில் செல்ல விடும் போது வழியில் பெட்ரோல் போட சென்றேன். அங்கு எனக்கு முன்னால் நின்ற நபருக்கு வயது 50+ இருக்கும். ஒரு பிங்க் நிற ஸ்கூட்டியுடன். மிகவும் பதட்டமாக இருந்தார். டாங்கை திறப்பதற்குள் கைகள் நடுங்கின. அவருக்கு முன்னால் இருப்பவருக்கு பெட்ரோல் போடுவதற்குள் நான்கைந்து முறை சீட்டை மூடி மூடி திறந்தார். அவர் செய்கை எனக்கு வித்தியாசமாக இருந்தது. அலுவல் வேலையாக போவது போல் ஒரு பெரிய தோல் பையை தோளில் தொங்கப் போட்டிருந்தார். ஏன் இவ்வளவு பதட்டம்? யாருக்காவது உடம்பு சரியில்லாமல் இருக்குமா? அவசர அலுவலாக இருக்குமா? புரியவில்லை. நான் அவரையே கவனித்துக்கொண்டு இருந்தேன். அதே படபடப்புடன் பெட்ரோல் போட்டார். வேகமாக டாங்கை மூடி வண்டியில் ஏறி உட்காராமல் ஆக்ஸ்லேட்டரை வேகமாக கொடுத்து வண்டியுடனேயே தானும் ஓடி அங்குள்ள சுவரில் மோதி கீழே விழுந்தார். விழுந்த வேகத்தில் எழுந்து வண்டியை சரி செய்து கிளப்ப முயற்சித்தார். வண்டி ஜாம் ஆகி விட்டது. அங்கு இருந்தவர்கள் உதவியுடன் வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு சென்று விட்டார். என்னடாது இப்படி ஆய்டுத்தேன்னு நினைச்சுண்டே பெட்ரோல் போட்டுண்டு நான் வெளியே வந்த பிறகு அருகில் உள்ள பஸ் ஸ்டாப்பில் அவரை பார்த்தேன்.

"என்ன சார் ஏதாவது ப்ராப்ளமா?
"அதெல்லாம் ஒண்ணும் இல்லம்மா நான் பார்த்துக்கறேன்."

அதற்கு பிறகு சிறிது நேரம் கவலை பட்டு விட்டு என்னுடய தினசரி வேலைகளில் மூழ்கி விட்டேன்.

அடுத்த நாள் அந்த வழியே போகும் போது அந்த பிங்க் ஸ்கூட்டி அங்கயே இருந்தது. அடுத்த நாள், அடுத்த நாள்.......... இன்று காலை வரை அது அங்கேயேதான் இருக்கிறது. நடுவில் ஒரு முறை பெட்ரோல் பங்க்கில் வேலை செய்யும் ஒருவரிடம் கேட்டேன்.
"இல்ல மேடம் யாரும் வந்து வண்டிய எடுத்துட்டு போல"
மனதில் ஒரே கேள்விகள். அவருக்கு என்ன ஆகியிருக்கும்? ஏன் வந்து வண்டியை எடுத்து செல்லவில்லை? அவர் வீட்டிலிருந்து கூட யாரும் தேடி இருக்க மாட்டர்களா? அவருக்கு வீடு, உறவு எதுவும் இல்லையா? எதுவும் புரியவில்லை.
சில நாட்கள் கழித்து அந்த வண்டி அப்புரப் படுத்தப் பட்டாலும் என்னுடய கண்கள் தன்னிச்சையாக அந்த வண்டி நிறுத்தி வைக்கப் பட்டிருந்த இடத்தை நோக்கி கண்டிப்பாகச் செல்லும். அந்த மனிதருக்கு என்ன ஆயிற்று, ஏன் இவ்வளவு நாள் யாரும் வரவில்லை என்ற கவலை மனதில் இருந்து கொண்டே இருக்கும்.

Thursday, March 19, 2009

நாய் (வளர்ப்பவர்கள்) ஜாக்கிரதை

நான்கைந்து மாதங்களுக்கு முன்னால் ஒரு நாள் காலை. பால் வரவில்லையே என்று பார்ப்பதற்காக வாசல் கேட்டை திறந்து கொண்டு சென்றேன். அப்போது கன்றுக்குட்டி ஸைசில் ஒரு நாய் என்னை நோக்கி பாய்ந்து ஓடி வந்தது. நான் அலறிய அலறலில் அக்கம்பக்கத்து ஜன்னல்களில் ஓரிரு முகங்கள் தோன்றி மறைந்தன.
"Tiger come here"
எனக்கு ஒரு அடி முன்னால் அந்த நாய் சட்டென்று நின்றது. அதைத் தொடர்ந்து ஒரு குரல்,
"பயப்படாதீங்க. ஒண்ணும் பண்ணாது. சும்மா ஜாலியா ஓடி வந்தது"
எனக்கு முதலில் பயத்தில் குரல் வரவில்லை. பிறகு சுதாரித்துக் கொண்டு,
" என்னங்க நாயக் கைல பிடிச்சுண்டு வர மாட்டிங்களா"
"டைகர் ரொம்ப சாதுங்க. பார்க்கத்தான் அப்படி இருக்கும்"
நான் டென்ஷன் ஆகி உள்ள வந்துட்டேன். எனக்கு தெரு நாய்களைக் கண்டால் அவ்வளவு பயம் இல்லை.
நாய் வளர்ப்பவர்கள் பண்ணும் லொள்ளுதான் ரொம்ப ஜாஸ்தி.
முன்ன ஒரு முறை கடைக்கு போன போது ஒரு பெண் தன்னுடய நாயுடன் வந்தாள். எப்பொழுதும் போல் அதைப் பார்த்தவுடன் பயந்து நகர்ந்தேன். உடனே அவள் நாயிடம், " இங்க வா aunty பயப்படறாங்க பாரு" அப்படின்னா. செம கடுப்பு.

இரண்டு நாட்களுக்கு முன் walking போகலாமென்று நானும் என் பெண்ணும் கிளம்பினோம். அப்ப ஒரு பெண், தன் நாயுடன் walking வந்து கொண்டிருந்தாள். அங்கிருந்த சில தெரு நாய்களை பார்த்த அந்த பெண், "வா ப்ரின்ஸி வீட்டுக்கு போகலாம் இங்க நாய் தொல்லை ஜாஸ்தியா இருக்கு" என்றாலே பார்க்கலாம்.

Tuesday, March 17, 2009

சமீபத்தில் படித்தவை

சமீபத்தில் படித்தவை இரண்டு புத்தகங்கள். ஒன்று சுஜாதாவின் கணையாழி கடைசி பக்கங்கள் 1965-1998, இரண்டு லா.ச.ரா வின் படைப்பிலக்கியங்கள். இரண்டுமே அற்புதமாக இருந்தன.
முதலில் சுஜாதா. ஸ்ரீரங்கம் எஸ்.ஆரின் கடைசி பக்கங்களின் diluted version தான் கற்றதும் பெற்றதும் என்று தோன்றுகிறது. எல்லாவற்றைப் பற்றியும் பேசி இருக்கிறார் எப்பொழுதும் போல. இன்னும் தைரியமாக எல்லோரையும் விமர்சித்திருக்கிறார். மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் புத்தகம்.
அடுத்து ல.ச.ரா. இவ்வளவு நாள் இவரை படிக்காமல் இருந்ததற்காக வருந்துகிறேன். அவருடயதிலிருந்து சில வரிகள்.
"மனித வித்துக்குத்தான் ஒரு மகத்துவம் உண்டு. ஒரே மரத்தில் மாங்காய் காய்க்கும், தேங்காய் பாளை விடும், அவரை பூக்கும். பாகல் படரும்."

"குடும்பம் ஒரு க்ஷீராட்சி. அதிலிருந்து தான் லக்ஷ்மி, ஐராவதம், அம்ருதம், ஆலகால விஷம் எல்லாம் உண்டாகிறது."

(மாமியார் மருமகளிடம்)
"நம் ஸ்த்ரீ வர்க்கத்தை சொல்கிறேன். ஆண்கள் - தகப்பனிலிருந்து ஆம்படையான் உள்பட கைக்குழந்தை வரை - குழந்தைகள், செல்லக் குழந்தை, அசட்டுக் குழந்தை, பிடிவாதக் குழந்தை. நாம்தான் ஸஹிச்சுண்டு போகணும் என்கிற பாடமாத்தான் சிருஷ்டியிலேயே தூய்மையான
பதவியை நமக்கு கொடுத்திருக்கு. அவா பேச்சிலே நமக்கு பிடிக்காததை காதிலேயே வாங்கிக்
கொண்டாதானே வம்பு? பெண்கள் சமயத்தில் கொஞ்சம்
செவிடு, கொஞ்சம் குருடு, கொஞ்சம் மக்காயிருந்தால்தான்
குடும்பமே நடக்கும். ஆனால் கொஞ்சம் கொஞ்சம்தான்.
ஞாபகம் இருக்கட்டும். ரஸத்தில் கொத்தமல்லியைக் கிள்ளிப்
போட்டாப் போல். அதிகமாகப் போனால் பச்சை வாசனை."

Thursday, March 12, 2009

இன்றைய சமுதாயம்

மார்ச் மாதம் , தேர்வுகள் வந்தாச்சு. பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிகள் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்ளும் செய்திகளும் அதிகமாகி விட்டது. இது வருடா வருடம் தொடர்கிறது. வாய்ப்புகள் அதிகம் இருக்கும் இந்த கால கட்டத்தில் இளம் சமுதாயத்தினருக்கு தன்னம்பிக்கை இல்லாமல் போவது துரதிர்ஷ்டமான விஷயம். இவர்களுக்கு தக்க கவுன்சிலிங் முதலிலிருந்தே செய்ய வேண்டியது பெற்றோரின் கடமை. என்ன, அதற்கு முன்னால் அவர்கள் தெளிவாக இருக்க வேண்டும். நாம் இந்த செய்திகளை படித்து விட்டு ஐந்து நிமிடம் அநுதாபப் பட்டு விட்டு அடுத்த செய்திக்கு போய் விடுகிறோம். நாட்டுல செய்திகளுக்கா பஞ்சம்.

எனக்கு தெரிஞ்சு 20 வருடம் முன்னால் எங்கள் அடுத்த வீட்டு பையன் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு முன்னால் (பிப்ரவரி என்று நினைக்கிரேன்) காணாமல் போனான். தேடாத இடம் பாக்கி இல்லை. சரியாக ஒரு வருடம் கழித்து அவன் திருச்சி பஸ்டாண்டில் திரு திரு என்று முழித்துக் கொண்டிருப்பதை எங்கள் தெருவில் உள்ள ஒருவர் பார்த்து விட்டு குரல் கொடுத்திருக்கிறார். முதலில் பயந்து ஓடியவன் பிறகு வந்திருக்கிறான். ஊரெல்லாம் சுற்றி விட்டு வீடே தேவலை என்று வந்திருக்கிறான். ஆனால் அப்பா, சித்தப்பாக்கள் டின் கட்டுவார்களோ என்று பயம். அப்புறம் அவனை சமாதானப் படுத்தி வீட்டில் இருப்பவர்களுக்கு செய்தி தெரிவித்து அவனை அவர்களிடம் ஒப்படைத்தாகிவிட்டது. இப்பொழுது மணமாகி நன்றாக இருப்பதாக கேள்வி. எல்லோருக்கும் ஒரு வழி பிறக்காமலா போகும்?

Thursday, February 12, 2009

கனவுகள்

நாம் காணும் கனவுகளை பற்றியும் அதன் காரணங்கள் பற்றியும் பல கருத்துக்கள் நிலவுகின்றன. கனவில் வரும் காட்சிகள் எல்லாம் நாம் நிஜத்தில் அனுபவித்தவையாக இருக்கும் என்கிறார்கள். சில சமயம் இவ்வாறு கனவு வந்தால் இதெது நடக்கும் என்கிறார்கள்.
என்னுடய கனவில் எப்பொழுதும் பிரம்மாண்டமாக எல்லாம் வரும். மிகப் பெரிய மலைகள், மிகவும் அகலமான, நீளமான நதிகள், பெரிய மலைப் பாம்பு இப்படித்தான் வரும். சமீபத்தில் ஒரு மிகப் பெரிய கோவில் கோபுரம். நுழைந்தவுடன் ஒரே ஒரு சன்னிதி. இது அமைந்திருந்தது மிகவும் சுமாராக பராமரிக்கப் பட்டிருந்த ஒரு பரந்த இடத்தில். இவ்வாறு வரும் கனவுகளுக்கு நானாக கொடுத்துக் கொள்ளும் விளக்கம். நாம வாழ்க்கைல ரொம்ப பெரிசா ஏதோ சாதிக்கப் போறோம் என்பது தான். ஆனால் இது வரை கனவு மட்டும் தான் பெரிதாக வந்து கொண்டிருக்கிறது. எப்படி இருந்தாலும் இந்த பிரம்மாண்டத்தை நான் ரசிக்கிரேன். நான் இவற்றை விரும்புவதால் கூட இந்த மாதிரியான கனவுகள் வரலாம். சின்ன வயதில் பாண்டி விளையடுவதற்கு I first என்று கத்திக் கொண்டே தான் தினமும் எழுந்திருப்பேன்.
இப்பொழுதும் என் பையன் கனவில் தொடர்ந்து வருவது கேக், ஐஸ்க்ரீம், சாக்லேட்தான்.

Wednesday, February 4, 2009

அபியும் நானும்

சினிமாவில்தான் அபியும் அப்பாவும். நிஜத்தில் அபியும் அம்மாவும்தான். (அது அபி நயா வாக இருந்தாலும் சரி அபி ஷேக் காக இருந்தாலும் சரி) நான் குழந்தைகளை பள்ளியில் விடும்போது எவ்வளவு அம்மாக்களை பார்க்கிறேன். எவ்வளவு அம்மாக்களுடன் பழகுகிறேன். அப்பாக்கள் ஒரு two wheeler or car with driver (அவரவர்கள் வசதிக்கேற்ப), மனைவி பேரில் ஒரு bank account with reasonable balance ஆகியவற்றை மனைவிக்கு கொடுத்து விடுகிறார்கள். (I am talking about house wives. நிறைய பேர் இருக்காங்கப்பா). இதை வைத்துக் கொண்டு அம்மாக்கள் குழந்தைகளை எல்லா கூடுதல் வகுப்புகளிலும் போட்டு விட்டு அவர்களுடன் அலைந்து கொண்டு, எப்பொழுதும் அவர்கள் நினைவாகவே கவலை பட்டுக் கொண்டு(முக்கியமாக தன் குழந்தையை விட திறமையான குழந்தயை பார்க்கும் போது). இதில் குழந்தைகள் ரொம்பவே பாவம். அதுக்கு interest இருக்கோ இல்லையோ அம்மா சொல்பவற்றை கேட்டுக் கொண்டு. இந்த போராட்டம் L.K.G முதல் ஆறு ஏழு வகுப்புகளுக்கு தொடற்கிரது. இது குறைவதற்கு காரணங்கள்
1. பள்ளி பாடம் அதிகமாவது
2. குழந்தைகளின் விழிப்புணர்வு (போம்மா வேற வேல இல்ல என்னால முடியாதுன்னு சொல்ர தைரியம் வருவது)
3. அப்பாக்களின் விழிப்புணர்வு. (என்னடி இது இவ்வளவு நாளா பணம் செலவழிக்கர பெருசா ஒண்ணும் result இல்லயே) - எல்லாக் குழந்தைகளுக்கும் எல்லாம் வராது. அதுகளுக்கு என்ன பிடிக்கும் என்று பார்த்துத்தான் சேர்க்க வேண்டும்.
4. அம்மாக்களுடய energy level குறைவது.

ஆனால் படுத்தல் வேறு உருவத்தில் வருகிரது. IIT coaching அது இது என்று மூச்சு விட நேரம் இருப்பதில்லை.
ஒரு அம்மா என்னிடம் சொன்னது.
" எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. பாருங்கோ படிச்சதையெல்லாம் மறந்துட்டேன்னு சொல்றா. இவளுக்காக தினமும் சுந்தர காண்டம் படிக்க ஆரம்பிக்கணும். இவ ஒழுங்கா படிச்சா இதெல்லாம் எனக்கு தேவையா?"(பாவம் ராமர்)
அன்பு, பாசம் என்று இவர்கள் படுத்தும் பாட்டில் இருந்து குழந்தைகளுக்கு என்று விமோசனம்???? இவர்களுடய பொழுது போக்கிற்கு குழந்தைகளை வைத்து விளையாடுகிறர்களோ என்று தோன்றும்.

Sunday, February 1, 2009

ஒவ்வொறுமுறை சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் படிக்கும் போதும், நாமும் இவரைப் போலத்தான் பல விஷயங்களை பார்க்கிறோம், கேட்கிறோம். இவரால் மட்டும் எப்படி இவ்வளவு நயமாக எல்லோரும் ரசிக்கும்படி அழகாக எழுத முடிகிரது என்று தோன்றும். மற்றுமொரு ஆச்சரியமான விஷயம் அவருடைய அபரிதமான ஞானம். ஆழ்வார்கள் முதல் அறிவியல் வரை எந்த விஷயத்தை எடுத்தாலும் அதில் அவருக்கு இருக்கும் ஆர்வம். 75 வயதுக்கும் இளமையாக இருந்து மறைந்தவர்.

இப்பொழுது பலரும் வலையில் எழுதுவது கண்டு ஆர்வம் கொண்டு (பைத்தியக்காரத்தனமாகக் கூட இருக்கலாம்) கிறுக்க ஆரம்பித்திருக்கிறேன்.
எவ்வளவு தூரம் செல்லும். பார்க்கலாம்.