Monday, December 21, 2009

என்னுடய வீட்டிற்கு அருகே ஒரு காலி மைதானம் இருக்கிறது. ஒரு இடம் காலியாக இருந்தால் நம் மக்கள் என்ன செய்வார்கள் என்பது தெரிந்ததுதானே. குப்பை கொட்டுவது முதல் முடிந்த எல்லா வகைகளிலும் அதை சுகாதாரமற்றதாக ஆக்கி விட்டார்கள். அதன் அருகில் க்ளினிக் வைத்திருக்கும் டாக்டர் கூட அந்த மைதானத்தின் அந்த நிலைக்கு தன்னாலான பங்கை அளித்து வந்தார். (எப்படி ஒரு டாக்டர் ஒரு சுகாதாரமற்ற ஒரு நிலையை விரும்புகிறார் என்று புரியவில்லை).

ஆறு மாதத்திற்கு முன்னால் இரண்டு ஹிந்தி பேசும் பையன்கள் (18-20 வயது இருக்கும்) வந்தார்கள். ஒரு தள்ளு வண்டியில் பானி பூரி, சன்னா சமோசா, பளபளவென்றிருக்கும் ஜிலேபி மற்றும் இதர ஐட்டங்களுடன் மைதானமருகில் கடை விரித்தாயிற்று. தினமும் மதியம் 2 மணி முதல் இரவு எட்டு, ஒன்பது மணி வரை கடை நேரம். இரண்டே மாதங்களில் நல்ல பிக் அப். பக்கத்தில் உள்ள மாலில் வேலை செய்யும் பையன்கள், பெண்கள், பள்ளி விட்டு அந்த வழியே செல்லும் குழந்தைகள், ஆட்டோ காரர்கள் என பல தரப்பட்ட கஸ்டமர்கள். எனக்கு அதைப் பார்த்தால் கோபம் கோபமாக வரும். என்ன மக்கள், யார் எங்க, என்ன கடை போட்டாலும் வாங்குவார்களா? மைதானமே ஒரு தவறான சாய்ஸ் கடை போட அதிலும் அதைத் தாண்டி போகும் வாகனங்கள் கிளப்பும் புகை மற்றும் புழுதி. (எல்லா உணவுப் பண்டங்களும் திறந்துதான் இருக்கும்).

ஆரம்பத்தில் நான் அந்த வழியாகப் போகும் போது அவர்களை முறைத்துக் கொண்டுதான் போவேன். என்னுடய பெண் சொல்வாள், “ தேவையில்லாத வம்பை விலைக்கு வாங்காதே” என்று. என்னுடய கவலையே வம்பு பண்ண எனக்கு தைரியம் இல்லாததுதான்.
இதை எல்லாம் தடுக்க வேண்டும் என்று மனதில் தோன்றுவதை செயல் படுத்த தெரியவும் இல்லை, துணிச்சலும் இல்லை. நாட்டுல நிறைய பேர் என்ன மாதிரிதான் இருக்காங்கன்னு நினைக்கிறேன்.

இரண்டு நாட்களுக்கு முன்னால் அவனிடம் ’ஒரு மசால் வடை கொடு’என்று கேட்டேன். லேசான கேலி புன்னகையுடன் “சாப்டவா, பார்சலா” என்றான்.
”பார்சல்தான், எலிப் பொறியில் வைக்க”