Friday, June 25, 2010

பிச்சை பாத்திரம் ஏந்தி.....................

எத்தனை வகை பாத்திரங்கள்.

மூன்று சக்கர கூண்டு வண்டியில் சுற்றிலும் சாய் பாபா படம் ஒட்டி, சாய் பஜன் கேசட் போட்டு தினமும் வரும் 15 முதல் 30 வயது வரை உள்ள சாய் பக்தர்கள் (?????)

கொழு கொழுவென்று நன்றாக விபூதி எட்டுக் கொண்டு “கஜானனம் பூத கனாதி சேவிதம்” என்று தெரிந்த நாலு ஸ்லோகங்களை சொல்லிக் கொண்டு கையில் அர்ச்சதை எடுத்து வந்து, தீர்க்க சுமங்கலியா இரு” என்ற ஆசிர்வாதத்துடன் கேட்கப்படும் பிச்சை.

நல்லா அயர்ன் பண்ணின பேண்ட் சர்ட் போட்டுக் கொண்டு, “நாங்க ரிடயர்ட் பீபல். இவர் என் ஃப்ரண்ட். மனைவிக்கு ரெண்டு கிட்னியும் ஃபெயிலியர் ஆயிடுத்து. மெடிகல் எக்ஸ்பென்ஸ் சமாளிக்க முடியல. பெண்ணுக்கு வேற கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிருக்கு. நீங்க எல்லாம் தான் ஐந்நூறு ஆயிரம் கொடுத்து உதவி பண்ணனும்.”

காலேஜ் ஃபீஸ் கட்ட வேண்டும் என்று கேட்டு வரும் பையன்கள்.

ஒரு நாள் ஒரு வயதான பெண்மணி, பார்க்க டிஸண்டா ட்ரஸ் பண்ணி இருந்தார். “ கேன் யூ
கிவ் மீ டென் ருபீஸ்”

“என்ன பாட்டி பார்க்க டீஸண்டா இருக்கீங்க பிச்சை எடுக்கிறீங்க?”

“என்ன பண்றது நானும் ஆபிஸ்ல வேலை பார்த்து ரிடயர் ஆனவதான். மாமா போன வருஷம் போய்ட்டார். பையன் கைல இருந்த காச பிடுங்கிண்டு துரத்திட்டான். வேற வழி தெரியல வயசான காலத்துல”

உண்மையாக இருக்கலாம். பாவமாக இருந்தது.

அபஸ்வரமாக நாதஸ்வரத்தில் சினிமா பாடல்களைப் பாடிக் கொண்டு வரும் பிச்சைக்காரர்கள்.

இது தவிர இன்றும் தொடரும் பூம் பூம் மாட்டுக் காரன் மற்றும் குடு குடுப்பக்காரன்.

இவைகளை மட்டுமே பார்த்து பழகிய கண்களுக்கு பாலா கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திய பாத்திரங்கள் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து மீளுவது சற்று கடினமாக இருந்தது.

நான் கடவுள் படம் பார்த்து ஒரு வருடம் கழித்தும் அதன் பாதிப்பு இருக்கிறது. இப்பொழுதெல்லாம் ஒவ்வொரு பிச்சைக்காரரையும் பார்க்கும் போதும் இவர் பிண்ணனியில் என்ன இருக்கும் என்ற யோசனை வருகிறது.

பிச்சை எடுப்பவர்களின் மறு வாழ்விற்க்காக அரசாங்கம் ஏதாவது திட்டம் கொண்டு வந்து பிச்சை எடுப்பதை முற்றிலும் தடை செய்ய வேண்டும். உடல் உழைப்பை அளிக்க முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு ஒரு இல்லம் மாதிரி அமைத்து உதவலாம். தவிர மற்றவர்களுக்கு ஒரு வேலை வாய்ப்பு கொண்டு வரலாம். இதற்கு பண வசதி படைத்தவர்கள் அரசாங்கத்திற்கு உதவ வேண்டும். ஒவ்வொரு மனிதனும் சுய மரியாதையுடனும் , பிறரிடம் கை நீட்டாமலும் வாழும் நிலை வர வேண்டும்.

நமது புண்ணிய கணக்கை கூட்டுவதற்காக பிச்சை போட்டு அவர்களை சோம்பேறிகளாக்குவதை நாம் நிறுத்த வேண்டும்.

பிச்சை எடுப்பவர்களை வைத்து பிழைப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப் பட வேண்டியவர்கள்.