Thursday, March 19, 2009

நாய் (வளர்ப்பவர்கள்) ஜாக்கிரதை

நான்கைந்து மாதங்களுக்கு முன்னால் ஒரு நாள் காலை. பால் வரவில்லையே என்று பார்ப்பதற்காக வாசல் கேட்டை திறந்து கொண்டு சென்றேன். அப்போது கன்றுக்குட்டி ஸைசில் ஒரு நாய் என்னை நோக்கி பாய்ந்து ஓடி வந்தது. நான் அலறிய அலறலில் அக்கம்பக்கத்து ஜன்னல்களில் ஓரிரு முகங்கள் தோன்றி மறைந்தன.
"Tiger come here"
எனக்கு ஒரு அடி முன்னால் அந்த நாய் சட்டென்று நின்றது. அதைத் தொடர்ந்து ஒரு குரல்,
"பயப்படாதீங்க. ஒண்ணும் பண்ணாது. சும்மா ஜாலியா ஓடி வந்தது"
எனக்கு முதலில் பயத்தில் குரல் வரவில்லை. பிறகு சுதாரித்துக் கொண்டு,
" என்னங்க நாயக் கைல பிடிச்சுண்டு வர மாட்டிங்களா"
"டைகர் ரொம்ப சாதுங்க. பார்க்கத்தான் அப்படி இருக்கும்"
நான் டென்ஷன் ஆகி உள்ள வந்துட்டேன். எனக்கு தெரு நாய்களைக் கண்டால் அவ்வளவு பயம் இல்லை.
நாய் வளர்ப்பவர்கள் பண்ணும் லொள்ளுதான் ரொம்ப ஜாஸ்தி.
முன்ன ஒரு முறை கடைக்கு போன போது ஒரு பெண் தன்னுடய நாயுடன் வந்தாள். எப்பொழுதும் போல் அதைப் பார்த்தவுடன் பயந்து நகர்ந்தேன். உடனே அவள் நாயிடம், " இங்க வா aunty பயப்படறாங்க பாரு" அப்படின்னா. செம கடுப்பு.

இரண்டு நாட்களுக்கு முன் walking போகலாமென்று நானும் என் பெண்ணும் கிளம்பினோம். அப்ப ஒரு பெண், தன் நாயுடன் walking வந்து கொண்டிருந்தாள். அங்கிருந்த சில தெரு நாய்களை பார்த்த அந்த பெண், "வா ப்ரின்ஸி வீட்டுக்கு போகலாம் இங்க நாய் தொல்லை ஜாஸ்தியா இருக்கு" என்றாலே பார்க்கலாம்.

Tuesday, March 17, 2009

சமீபத்தில் படித்தவை

சமீபத்தில் படித்தவை இரண்டு புத்தகங்கள். ஒன்று சுஜாதாவின் கணையாழி கடைசி பக்கங்கள் 1965-1998, இரண்டு லா.ச.ரா வின் படைப்பிலக்கியங்கள். இரண்டுமே அற்புதமாக இருந்தன.
முதலில் சுஜாதா. ஸ்ரீரங்கம் எஸ்.ஆரின் கடைசி பக்கங்களின் diluted version தான் கற்றதும் பெற்றதும் என்று தோன்றுகிறது. எல்லாவற்றைப் பற்றியும் பேசி இருக்கிறார் எப்பொழுதும் போல. இன்னும் தைரியமாக எல்லோரையும் விமர்சித்திருக்கிறார். மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் புத்தகம்.
அடுத்து ல.ச.ரா. இவ்வளவு நாள் இவரை படிக்காமல் இருந்ததற்காக வருந்துகிறேன். அவருடயதிலிருந்து சில வரிகள்.
"மனித வித்துக்குத்தான் ஒரு மகத்துவம் உண்டு. ஒரே மரத்தில் மாங்காய் காய்க்கும், தேங்காய் பாளை விடும், அவரை பூக்கும். பாகல் படரும்."

"குடும்பம் ஒரு க்ஷீராட்சி. அதிலிருந்து தான் லக்ஷ்மி, ஐராவதம், அம்ருதம், ஆலகால விஷம் எல்லாம் உண்டாகிறது."

(மாமியார் மருமகளிடம்)
"நம் ஸ்த்ரீ வர்க்கத்தை சொல்கிறேன். ஆண்கள் - தகப்பனிலிருந்து ஆம்படையான் உள்பட கைக்குழந்தை வரை - குழந்தைகள், செல்லக் குழந்தை, அசட்டுக் குழந்தை, பிடிவாதக் குழந்தை. நாம்தான் ஸஹிச்சுண்டு போகணும் என்கிற பாடமாத்தான் சிருஷ்டியிலேயே தூய்மையான
பதவியை நமக்கு கொடுத்திருக்கு. அவா பேச்சிலே நமக்கு பிடிக்காததை காதிலேயே வாங்கிக்
கொண்டாதானே வம்பு? பெண்கள் சமயத்தில் கொஞ்சம்
செவிடு, கொஞ்சம் குருடு, கொஞ்சம் மக்காயிருந்தால்தான்
குடும்பமே நடக்கும். ஆனால் கொஞ்சம் கொஞ்சம்தான்.
ஞாபகம் இருக்கட்டும். ரஸத்தில் கொத்தமல்லியைக் கிள்ளிப்
போட்டாப் போல். அதிகமாகப் போனால் பச்சை வாசனை."

Thursday, March 12, 2009

இன்றைய சமுதாயம்

மார்ச் மாதம் , தேர்வுகள் வந்தாச்சு. பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிகள் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்ளும் செய்திகளும் அதிகமாகி விட்டது. இது வருடா வருடம் தொடர்கிறது. வாய்ப்புகள் அதிகம் இருக்கும் இந்த கால கட்டத்தில் இளம் சமுதாயத்தினருக்கு தன்னம்பிக்கை இல்லாமல் போவது துரதிர்ஷ்டமான விஷயம். இவர்களுக்கு தக்க கவுன்சிலிங் முதலிலிருந்தே செய்ய வேண்டியது பெற்றோரின் கடமை. என்ன, அதற்கு முன்னால் அவர்கள் தெளிவாக இருக்க வேண்டும். நாம் இந்த செய்திகளை படித்து விட்டு ஐந்து நிமிடம் அநுதாபப் பட்டு விட்டு அடுத்த செய்திக்கு போய் விடுகிறோம். நாட்டுல செய்திகளுக்கா பஞ்சம்.

எனக்கு தெரிஞ்சு 20 வருடம் முன்னால் எங்கள் அடுத்த வீட்டு பையன் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு முன்னால் (பிப்ரவரி என்று நினைக்கிரேன்) காணாமல் போனான். தேடாத இடம் பாக்கி இல்லை. சரியாக ஒரு வருடம் கழித்து அவன் திருச்சி பஸ்டாண்டில் திரு திரு என்று முழித்துக் கொண்டிருப்பதை எங்கள் தெருவில் உள்ள ஒருவர் பார்த்து விட்டு குரல் கொடுத்திருக்கிறார். முதலில் பயந்து ஓடியவன் பிறகு வந்திருக்கிறான். ஊரெல்லாம் சுற்றி விட்டு வீடே தேவலை என்று வந்திருக்கிறான். ஆனால் அப்பா, சித்தப்பாக்கள் டின் கட்டுவார்களோ என்று பயம். அப்புறம் அவனை சமாதானப் படுத்தி வீட்டில் இருப்பவர்களுக்கு செய்தி தெரிவித்து அவனை அவர்களிடம் ஒப்படைத்தாகிவிட்டது. இப்பொழுது மணமாகி நன்றாக இருப்பதாக கேள்வி. எல்லோருக்கும் ஒரு வழி பிறக்காமலா போகும்?