Friday, June 25, 2010

பிச்சை பாத்திரம் ஏந்தி.....................

எத்தனை வகை பாத்திரங்கள்.

மூன்று சக்கர கூண்டு வண்டியில் சுற்றிலும் சாய் பாபா படம் ஒட்டி, சாய் பஜன் கேசட் போட்டு தினமும் வரும் 15 முதல் 30 வயது வரை உள்ள சாய் பக்தர்கள் (?????)

கொழு கொழுவென்று நன்றாக விபூதி எட்டுக் கொண்டு “கஜானனம் பூத கனாதி சேவிதம்” என்று தெரிந்த நாலு ஸ்லோகங்களை சொல்லிக் கொண்டு கையில் அர்ச்சதை எடுத்து வந்து, தீர்க்க சுமங்கலியா இரு” என்ற ஆசிர்வாதத்துடன் கேட்கப்படும் பிச்சை.

நல்லா அயர்ன் பண்ணின பேண்ட் சர்ட் போட்டுக் கொண்டு, “நாங்க ரிடயர்ட் பீபல். இவர் என் ஃப்ரண்ட். மனைவிக்கு ரெண்டு கிட்னியும் ஃபெயிலியர் ஆயிடுத்து. மெடிகல் எக்ஸ்பென்ஸ் சமாளிக்க முடியல. பெண்ணுக்கு வேற கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிருக்கு. நீங்க எல்லாம் தான் ஐந்நூறு ஆயிரம் கொடுத்து உதவி பண்ணனும்.”

காலேஜ் ஃபீஸ் கட்ட வேண்டும் என்று கேட்டு வரும் பையன்கள்.

ஒரு நாள் ஒரு வயதான பெண்மணி, பார்க்க டிஸண்டா ட்ரஸ் பண்ணி இருந்தார். “ கேன் யூ
கிவ் மீ டென் ருபீஸ்”

“என்ன பாட்டி பார்க்க டீஸண்டா இருக்கீங்க பிச்சை எடுக்கிறீங்க?”

“என்ன பண்றது நானும் ஆபிஸ்ல வேலை பார்த்து ரிடயர் ஆனவதான். மாமா போன வருஷம் போய்ட்டார். பையன் கைல இருந்த காச பிடுங்கிண்டு துரத்திட்டான். வேற வழி தெரியல வயசான காலத்துல”

உண்மையாக இருக்கலாம். பாவமாக இருந்தது.

அபஸ்வரமாக நாதஸ்வரத்தில் சினிமா பாடல்களைப் பாடிக் கொண்டு வரும் பிச்சைக்காரர்கள்.

இது தவிர இன்றும் தொடரும் பூம் பூம் மாட்டுக் காரன் மற்றும் குடு குடுப்பக்காரன்.

இவைகளை மட்டுமே பார்த்து பழகிய கண்களுக்கு பாலா கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திய பாத்திரங்கள் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து மீளுவது சற்று கடினமாக இருந்தது.

நான் கடவுள் படம் பார்த்து ஒரு வருடம் கழித்தும் அதன் பாதிப்பு இருக்கிறது. இப்பொழுதெல்லாம் ஒவ்வொரு பிச்சைக்காரரையும் பார்க்கும் போதும் இவர் பிண்ணனியில் என்ன இருக்கும் என்ற யோசனை வருகிறது.

பிச்சை எடுப்பவர்களின் மறு வாழ்விற்க்காக அரசாங்கம் ஏதாவது திட்டம் கொண்டு வந்து பிச்சை எடுப்பதை முற்றிலும் தடை செய்ய வேண்டும். உடல் உழைப்பை அளிக்க முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு ஒரு இல்லம் மாதிரி அமைத்து உதவலாம். தவிர மற்றவர்களுக்கு ஒரு வேலை வாய்ப்பு கொண்டு வரலாம். இதற்கு பண வசதி படைத்தவர்கள் அரசாங்கத்திற்கு உதவ வேண்டும். ஒவ்வொரு மனிதனும் சுய மரியாதையுடனும் , பிறரிடம் கை நீட்டாமலும் வாழும் நிலை வர வேண்டும்.

நமது புண்ணிய கணக்கை கூட்டுவதற்காக பிச்சை போட்டு அவர்களை சோம்பேறிகளாக்குவதை நாம் நிறுத்த வேண்டும்.

பிச்சை எடுப்பவர்களை வைத்து பிழைப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப் பட வேண்டியவர்கள்.

Sunday, April 4, 2010

வயது ஏறுவதை .........................

வயது ஏறுவதை உணர்ந்தேன்
ஆண்டவன் சன்னிதியில் அதை கொடு இதை கொடு
என்று கேட்ட நாட்கள் போய்
அவனுக்கு தெரியாதா நமக்கு என்ன கொடுப்பது
என்ற எண்ணம் வந்த போது
வயது ஏறுவதை உணர்ந்தேன்

டீன் ஏஜ் பெண்களின் எதற்கெடுத்தாலும்
க்ளுக் க்ளுக் கைப் பார்த்து, என்ன லூசுத்தனம்
என்ற எண்ணம் வந்த போது
வயது ஏறுவதை உணர்ந்தேன்

சாம்பார் படம் என்று சானல் மாற்றிய காலம் போய்
ஆஹா ஜெமினி படம் நல்லாருக்கே என்று
பார்க்க உட்கார்ந்த போது
வயது ஏறுவதை உணர்ந்தேன்

ரஜினி ஸ்டைலில் மாடி ஏறிய பின்
பத்து நிமிட ஓய்வு தேவை பட்ட போது
வயது ஏறுவதை உணர்ந்தேன்

60 கி.மீ ஸ்பீடில் பைக்கில் போக ஆசைப்பட்டது போய்
40கி.மீ க்கே என்னதுக்கு இவ்வளவு வேகம்
என்று கேட்கும் போது
வயது ஏறுவதை உணர்ந்தேன்

கண்ணாடியில் பார்க்கும் போது தெரியும்
நரை முடியும்
தோளுக்கு மேல் வளர்ந்து நிற்கும்
இரு குழந்தைகளும்
அது உண்மை என்று உறுதி படுத்தின

அம்மா வீட்டுக்கு சென்ற போது
வயதான காலத்திலும்
உனக்கு பிடிக்கும்னு
கேசரி பண்ணினேன் என்று
ஆசையாக அம்மா கொடுத்த போது
மீண்டும் குழந்தையானேன்.

Saturday, April 3, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா............

அப்பா.. பசங்களுக்கு பரிட்சை முடிஞ்சாச்சு. அடுத்து, எவ்வளவு விஷயம் இருந்தாலும், போர் அடிக்கறது என்ன பண்றது புலம்பல் ஆரம்பிச்சாச்சு. சரின்னு என் வாழ்க்கையில் முதல் முறையா (கடைசியும் இதுதான்) சிம்பு படம் போனோம். கெளதம் படம் கொஞ்சம் பரவல்லாம இருக்கும்னுட்டு. படத்துல அடிக்கடி சிம்பு சொல்ற டயலாக், “உலகத்துல இவ்வளவு பெண்கள் இருக்கறச்ச நான் ஏன் ஜெஸ்ஸிய (த்ரிஷா) லவ் பண்றேன்”. வெளில வந்து நான் சொன்னது , “ உலகத்துல இவ்வளவு படம் இருக்கறச்ச நான் ஏன் இத வந்து பார்த்தேன்.” பேசறாங்க,பேசறாங்க, படம் முழுக்க பேசிண்டே இருக்காங்க. வீட்டுக்கு வந்தப்புரம் கூட சிம்பு என் கிட்ட பேசற மாதிரி இருக்கு. கதைல ஆழமே இல்ல. த்ரிஷா பொம்மையாகவே வருகிறார். எப்பம்மா நடிக்க போர? பல்லைக் கடித்து கொண்டு பேசும் சிம்பு, அதிகமான ஆங்கில வசனங்கள்(கெளதமின் பழைய படங்களை ஞாபகப் படுத்துகிறது)
த்ரிஷா பின்னாலேயே அலையும் சிம்பு, “நான் உன்னை லவ் பண்றேன், இல்ல இல்ல இது சரி பட்டு வராது எவ்வரிதிங் இஸ் ஒவர், இல்ல இல்ல இல்ல நாம கல்யாணம் பண்ணிக்கலாம்” - இப்படி மாத்தி மாத்தி பேசி சிம்புவ மட்டும் இல்ல நம்மளையும் சாவடிக்கிறார் த்ரிஷா. விண்ணைத்தாண்டி வந்த தலைவலி.

Monday, February 15, 2010

ட்யூஷன் அவலம்

சின்ன க்ளாஸ்ல இருந்து பெரிய க்ளாஸ் வரை ட்யூஷன் அனுப்ப பல காரணங்கள்

பள்ளியில் ஒழுங்காக சொல்லி கொடுக்காமல் இருப்பது, பெற்றோருக்கு நேரம் இல்லாதது அல்லது அவர்களுக்கு அந்த பாடங்களை சொல்லி கொடுக்க தெரியாமல் இருப்பது.
இதை நன்கு பயன் படுத்தி கொள்கிறார்கள் ட்யூஷன் ஆசிரியர்கள்.
இப்பொழுதெல்லாம் வருடாந்திர ஃபீஸ்தான் வாங்கிக் கொள்கிறார்கள். சரியா எடுக்கலன்னு
பாதில பசங்க நின்னுட்டா அவங்களுக்கு வருமானம் போய்டும்ல. பணம் சம்பாதிப்பதில் கவனம் கூடி செய்யும் வேலையில் நேர்மை குறைந்து போனது வருந்தத்தக்கது. ஐம்பதுக்கும் மேற்பட்டவர்க்கு வகுப்பு எடுக்கும் போது அது பள்ளியை விட மோசமாகி விடுகிறது. மதிப்பெண் குறைவாக வாங்கும் மாணவர்களை (அவர்களிடம்தானே அதிக அக்கறை காட்ட வேண்டும்)தனிப்பட்ட முறையில் கவனிக்க முடிவதில்லை.

சின்ன க்ளாஸ் ட்யூஷன் அத விட கொடுமையா இருக்கு. LKG ல ஆரம்பிச்சு ட்யூஷன் எடுக்கறாங்க. ரொம்ப படிக்காதவங்க சின்ன க்ளாஸ்லய போட்டுடறாங்க. (இங்க மாசா மாசம் ஃபீஸ் வாங்குவாங்க)

எனக்கு தெரிஞ்சு ஒரு பெண்மணி இந்த மாதிரி க்ளாஸ் எடுக்கறாங்க. LKG முதல் ஆறு ஏழு வகுப்பு வரை உள்ள குழந்தைகள் அவளிடம் வருகின்றன. வகுப்பு எடுக்க ப்ரத்யேகமாக இடம் எல்லாம் கிடையாது. ஹால் அல்லது பெட் ரூமில் எல்லா குழந்தைகளும் ஒரே சமயத்தில் வாய் விட்டு சத்தமாக எதையாவது படித்துக் கொண்டு இருக்கும். நாம் போனால் இதற்கு நடுவிலேயே உரத்த குரலில் நம்முடன் பேசுவதும், நடுவில் ஃபோன் வந்தால் பேசுவதும் ஒரே இடத்தில்தான். ஒரு நாள் என்னை காத்திருக்க சொல்லி விட்டு ஒரு குழந்தைக்கு பாடம் சொல்லி கொடுத்தாள்.

topic: even number odd number

” சொல்லு எதெல்லாம் ஆட் நம்பர்” (செம சவுண்ட்)

“one, three, five, eight"

நறுக்கென்று ஒரு கிள்ளு தொடையில்.

என்னை பார்த்து,
“இதுகெல்லாம் படிக்கலேன்னு யார் குறை பட்டா”

(கிட்டதட்ட கண்ணில் ஜலம் வந்து விட்டது எனக்கு அந்த குழந்தையை பார்த்த போது)

குழந்தையின் காதை திருகி,

“நான் என்ன சொன்னேன், எதையெல்லாம் வகுத்தா zero வருமோ அது even , zero வரலேன்ன odd" (எதால வகுக்கனும் அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம்)

“நான் அப்புறமா கார்த்தால நீங்க ஃப்ரீயா இருக்கறச்ச வரேன்னு” சொல்லிட்டு எஸ் ஆயிட்டேன்.

இரண்டு நாட்களுக்கு அந்த குழந்தையின் முகம் கண்களில் வந்து கொண்டே இருந்தது.

இது மாதிரி எத்தனை குழந்தைகளோ? எத்தனை ஆசிரியர்களோ?

Tuesday, January 26, 2010

வராக மூர்த்தி

என்னுடய பையன் நான்கு வயது இருக்கும் போது மைசூர் பக்கம் டூர் போன போது ஒரு கோயில் அருகே இரண்டு மூன்று பன்றிகளைப் பார்த்து அன்று முதல் பன்றியின் மேல் தீராக் காதல் கொண்டு விட்டான். (மைசூர் ட்ரிப்ல வேற எதுவும் அவனை அந்த அளவு கவர்ந்ததாக தெரியவில்லை). சில நாட்கள் கழித்து டீ.வியில் babe - pig in the city பார்த்த பிறகு அவ்வளவுதான் (அங்கு பார்த்தது கருப்பு, இங்கு வெள்ளை)

"அம்மா!! அது எவ்வளவு க்யூட்டா இருக்கு பாரும்மா நாம ஒண்ணு வளர்க்கலாமா??
(எந்த கோணத்திலும் எனக்கு பன்றி க்யூட்டா தெர்ல.)"

"ஏண்டா உன்னய வளக்கறது போறாதா?"

"அதோட சேத்து ஒண்ணே ஒண்ணுமா?"

எல்லாவற்றிற்கும் சப்போர்ட் பண்ணும் பாட்டியிடம் போய்,

"அது உம்மாச்சி (கடவுள்) மாதிரி பாட்டி, அவர் கூட பன்னியா வந்திருக்கார்னு கதை சொல்லியிருக்கியே.”

”என்னடாது கஷ்ட காலம். பன்னிய எல்லாம் ஆத்துக்கு கொண்டு வரப்டாது.”


இந்த வீட்ல இதெல்லாம் நடக்காதுன்னு தெரிஞ்சு போய், இப்பல்லாம் ஃபோட்டோவில், டீவியில் பன்றியப் பாத்து கண்ல பல்ப் எரியரதோட அவ்வளவுதான்.

எனக்கு தெரிஞ்சு “போடா பன்னி” னு திட்டினால் அதை பெருமையோடு ஏற்றுக் கொள்பவன் இவனாகத் தான் இருக்கும்.

என்னுடைய பெண் அவனை எப்பொழுதும் ஆசையாக அழைப்பது, “பேப்” தான்.