Wednesday, May 27, 2009

பள்ளி ஆண்டு விழா

சிறு வயதில் அதிகமாக பள்ளி ஆண்டு விழாக்களில் கலந்து கொண்ட நினைவு இல்லை. 5ம் வகுப்பு படிக்கும் போது ஒரு டான்ஸ் ஆடின ஞாபகம். அதற்கு இன்று வரை உடன் பிறப்புகள் கேலி செய்து கொண்டிருப்பது வேறு விஷயம். (அதை யாருமே வீட்டிலிருந்து வந்து பார்க்கவில்லை. நான் பெருமையாக நினைத்து சொன்ன விஷயங்களை வைத்து என்னை ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள்).

இப்ப என் பசங்க பள்ளியில் ஆண்டு விழாவை ஷங்கர் பட ரேஞ்சிற்கு பிரம்மாண்டமாக கொண்டாடுகிறார்கள். ஒரு நிகழ்ச்சிக்கு குறைந்த பட்சம் 100 குழந்தைகள் எடுத்துக்கொள்வார்கள். பைட் பைபெர் கதைக்கு எக்கச்சக்க எலி.நம்ம சேர்க்கு அடிலேர்ந்து எல்லாம் எலி (L.KG, U.K.G எலி).

என்னுடய பெண் மூன்றாவது படிக்கும் போது ஆண்டு விழாவில் சேரனும்னு சொன்னப்ப விவரம் புரியாம சரி சொல்லிட்டேன். கிருஷ்ணர் பிறந்த உடன் வசுதேவர் யமுனை நதியை கடந்து செல்லும் காட்சியில் நதியாக இவளையும் சேர்த்து 100 குழந்தைகள்.எல்லாம் நீலமாக மாறியிருந்தன. இதில் கஷ்டப்பட்டு இவளைக் கண்டு பிடித்து ப்ரோக்ராம் முடிந்தவுடன் ,

"லாஸ்ட் ரோல ரைட்ல ரெண்டவதா நீ இருந்தியே நான் பக்கத்துல ஆன்டிக்கு கூட காண்பிச்சேன்"

"நான் செகன்ட் ரோல இருந்தேம்மா"(அவளுடய முகத்தை பார்க்க கஷ்டமாக இருந்தது) இதற்கு 15 நாட்களாக அலைச்சல் வேறு. .அதனால் அடுத்த வருடத்தில் இருந்து இதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டேன். அந்த ஆண்டு விழாவின் போது எடுத்த போட்டோ நான் எதிர்பார்த்தபடியே ஒளித்து வைக்கப்பட்டது.

அடுத்து ஐயாவோட turn. என்னோட instructions மீறி

"அம்மா என்னை annual day க்கு செலெக்ட் பண்ணிட்டாங்க"

"அதெல்லாம் முடியாது consent letter கொடுக்க மட்டேன்" (ஆமாம் நம்மிடம் எழுத்து மூலமாக ஒப்புதல் கேட்பார்கள்)

"என்னை என்ன பண்ண சொல்ர. அவங்க என்னிய jungle book la வர sherkhan மாதிரி நடிக்க சொன்னாங்க. நான் நடிச்சு காமிச்சேன். எல்லாரும்clap பண்ணி இந்த role க்கு நான் தான் best னு சொல்லிட்டங்க. எனக்கு தெரியாது. நீயே வேணா மேம் கிட்ட கேட்டுக்கோ"

"சும்மா ஒரு நிமிஷம் வரதுக்கெல்லாம் செலவும் பண்ணி அலையவும் முடியாது"

"உனக்கு தெரியுமா sherkhan dhan வில்லன். நெறய நேரம் வரும்" (அவனுக்கு நான் cartoon ரொம்ப பார்ப்பதில்லை என்ற வருத்தம் உண்டு)

"நான் வந்து school ல பேசுவேன்"

"சரி" (கண்ணில் மெல்லிய சோகம், பயம், எல்லாத்தயும் இவ வந்து கெடுக்க போறான்னு)

பள்ளிக்குச் சென்று அந்த டீச்சரை பார்த்து பேசினேன். அவள், இவ்வாறுselect ஆவது எவ்வளவு பாக்கியம் என்றும், அவள் டீச்சராக இருந்தும் அவளுடய பையனுக்கு 3 வருடங்களாக வாயிற்காப்போன் போன்ற ரோல் தான் கிடைப்பதாகவும் என் பையனிடம் கிடைத்தற்கரிய திறமை மறைந்திருப்பதாகவும், அவனுடய மகிழ்ச்சியை நான் கெடுப்பதாகவும் இத்யாதி, இத்யாதி..........

எல்லாம் கப்சா, ஆள் கிடைக்கணும் இல்லயா. என்ன பேசினால் அம்மாக்கள் விழுவார்கள் என்று பேசும் பேச்சு. நான் அதில் விழவில்லை. ஆனால் அவளிடம் தொடர்ந்து பேசி புரிய வைக்கும் பொறுமை இல்லததால் ஒப்புக் கொண்டேன். என் பேச்சை அவள் கேட்பதாகவும் இல்லை. இவ்வளவு buildup கொடுக்கப்பட்ட sherkahanம் ஒரு நிமிடம்தான் வந்தான். இதில் ட்ரெஸ் ரிகர்சல், மெயின் ப்ரொக்ராம்னு ரெண்டு நாள். பள்ளிஎங்கள் வீட்டில் இருந்து 3கி.மீ ப்ரொக்ராம் நடந்தது 10கி.மீ தள்ளி இருந்த ஒரு அரங்கில். பயங்கர லொள்ளு. என் அருமை புத்திரன் முகத்தில் புன்னகையுடன் ஆண்டு விழா இனிதே முடிந்தது.