Wednesday, April 15, 2009

மூன்று வாரங்களுக்கு முன்னால் பெண்ணை பள்ளியில் செல்ல விடும் போது வழியில் பெட்ரோல் போட சென்றேன். அங்கு எனக்கு முன்னால் நின்ற நபருக்கு வயது 50+ இருக்கும். ஒரு பிங்க் நிற ஸ்கூட்டியுடன். மிகவும் பதட்டமாக இருந்தார். டாங்கை திறப்பதற்குள் கைகள் நடுங்கின. அவருக்கு முன்னால் இருப்பவருக்கு பெட்ரோல் போடுவதற்குள் நான்கைந்து முறை சீட்டை மூடி மூடி திறந்தார். அவர் செய்கை எனக்கு வித்தியாசமாக இருந்தது. அலுவல் வேலையாக போவது போல் ஒரு பெரிய தோல் பையை தோளில் தொங்கப் போட்டிருந்தார். ஏன் இவ்வளவு பதட்டம்? யாருக்காவது உடம்பு சரியில்லாமல் இருக்குமா? அவசர அலுவலாக இருக்குமா? புரியவில்லை. நான் அவரையே கவனித்துக்கொண்டு இருந்தேன். அதே படபடப்புடன் பெட்ரோல் போட்டார். வேகமாக டாங்கை மூடி வண்டியில் ஏறி உட்காராமல் ஆக்ஸ்லேட்டரை வேகமாக கொடுத்து வண்டியுடனேயே தானும் ஓடி அங்குள்ள சுவரில் மோதி கீழே விழுந்தார். விழுந்த வேகத்தில் எழுந்து வண்டியை சரி செய்து கிளப்ப முயற்சித்தார். வண்டி ஜாம் ஆகி விட்டது. அங்கு இருந்தவர்கள் உதவியுடன் வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு சென்று விட்டார். என்னடாது இப்படி ஆய்டுத்தேன்னு நினைச்சுண்டே பெட்ரோல் போட்டுண்டு நான் வெளியே வந்த பிறகு அருகில் உள்ள பஸ் ஸ்டாப்பில் அவரை பார்த்தேன்.

"என்ன சார் ஏதாவது ப்ராப்ளமா?
"அதெல்லாம் ஒண்ணும் இல்லம்மா நான் பார்த்துக்கறேன்."

அதற்கு பிறகு சிறிது நேரம் கவலை பட்டு விட்டு என்னுடய தினசரி வேலைகளில் மூழ்கி விட்டேன்.

அடுத்த நாள் அந்த வழியே போகும் போது அந்த பிங்க் ஸ்கூட்டி அங்கயே இருந்தது. அடுத்த நாள், அடுத்த நாள்.......... இன்று காலை வரை அது அங்கேயேதான் இருக்கிறது. நடுவில் ஒரு முறை பெட்ரோல் பங்க்கில் வேலை செய்யும் ஒருவரிடம் கேட்டேன்.
"இல்ல மேடம் யாரும் வந்து வண்டிய எடுத்துட்டு போல"
மனதில் ஒரே கேள்விகள். அவருக்கு என்ன ஆகியிருக்கும்? ஏன் வந்து வண்டியை எடுத்து செல்லவில்லை? அவர் வீட்டிலிருந்து கூட யாரும் தேடி இருக்க மாட்டர்களா? அவருக்கு வீடு, உறவு எதுவும் இல்லையா? எதுவும் புரியவில்லை.
சில நாட்கள் கழித்து அந்த வண்டி அப்புரப் படுத்தப் பட்டாலும் என்னுடய கண்கள் தன்னிச்சையாக அந்த வண்டி நிறுத்தி வைக்கப் பட்டிருந்த இடத்தை நோக்கி கண்டிப்பாகச் செல்லும். அந்த மனிதருக்கு என்ன ஆயிற்று, ஏன் இவ்வளவு நாள் யாரும் வரவில்லை என்ற கவலை மனதில் இருந்து கொண்டே இருக்கும்.