Tuesday, January 26, 2010

வராக மூர்த்தி

என்னுடய பையன் நான்கு வயது இருக்கும் போது மைசூர் பக்கம் டூர் போன போது ஒரு கோயில் அருகே இரண்டு மூன்று பன்றிகளைப் பார்த்து அன்று முதல் பன்றியின் மேல் தீராக் காதல் கொண்டு விட்டான். (மைசூர் ட்ரிப்ல வேற எதுவும் அவனை அந்த அளவு கவர்ந்ததாக தெரியவில்லை). சில நாட்கள் கழித்து டீ.வியில் babe - pig in the city பார்த்த பிறகு அவ்வளவுதான் (அங்கு பார்த்தது கருப்பு, இங்கு வெள்ளை)

"அம்மா!! அது எவ்வளவு க்யூட்டா இருக்கு பாரும்மா நாம ஒண்ணு வளர்க்கலாமா??
(எந்த கோணத்திலும் எனக்கு பன்றி க்யூட்டா தெர்ல.)"

"ஏண்டா உன்னய வளக்கறது போறாதா?"

"அதோட சேத்து ஒண்ணே ஒண்ணுமா?"

எல்லாவற்றிற்கும் சப்போர்ட் பண்ணும் பாட்டியிடம் போய்,

"அது உம்மாச்சி (கடவுள்) மாதிரி பாட்டி, அவர் கூட பன்னியா வந்திருக்கார்னு கதை சொல்லியிருக்கியே.”

”என்னடாது கஷ்ட காலம். பன்னிய எல்லாம் ஆத்துக்கு கொண்டு வரப்டாது.”


இந்த வீட்ல இதெல்லாம் நடக்காதுன்னு தெரிஞ்சு போய், இப்பல்லாம் ஃபோட்டோவில், டீவியில் பன்றியப் பாத்து கண்ல பல்ப் எரியரதோட அவ்வளவுதான்.

எனக்கு தெரிஞ்சு “போடா பன்னி” னு திட்டினால் அதை பெருமையோடு ஏற்றுக் கொள்பவன் இவனாகத் தான் இருக்கும்.

என்னுடைய பெண் அவனை எப்பொழுதும் ஆசையாக அழைப்பது, “பேப்” தான்.