Wednesday, August 5, 2015

கார்த்தி.... இவனப் பத்தி ரொம்ப நாளா எழுதனும்னு நெனச்சுண்டு இருக்கேன்... என்னமோ எழுத ஆரம்பித்து ரெண்டு வரிக்கு மேல் தொடர முடியாமல் போச்சு..
நான் கல்யாணமாகி ஆறு மாசத்துக்கெல்லாம் புது ஃப்ளாட்டுக்கு குடித்தனம் போய்ட்டோம்., அந்த காம்ப்ளெக்ஸ்ல, இவருடன் வேலை செய்பவரும் ஃப்ளாட் வாங்கியிருந்தார்... அவர் மகன் தான் கார்த்திக்.. ஆறாவதோ ஏழாவதோ படித்துக் கொண்டிருந்தான்.. அடிக்கடி வருவான்.. ஆண்ட்டி ஆண்ட்டின்னு எதாவது பேசிண்டு இருப்பான்.. அப்புறம் சுபர்ணா பிறந்தவுடன், குழந்தையோடு விளையாடுவான்..

"ஆண்ட்டி என் பர்த்டேக்கு அடுத்த நாள் தான் ஆண்ட்டி இவ பிற்ந்திருக்கா.. இவ பர்த்டே எனக்கு மறக்கவே மறக்காது".
நாலு வருஷத்துல நாங்க வீடு மா வந்துட்டோம்.. அப்பப்ப சந்திபோம்..

ப்ளஸ் டூ முடிச்சு காலேஜ் சேரனும்.. மெரைன் இஞ்சினியரிங்தா படிக்கனும்கிறாம்ப்பா, நாராயணா நீயும் கூட வா காலேஜல சேர்க்க என்று போன் பண்ணினார் அவனோட அப்பா..

வெள்ளை ஃபுல் ஹாண்ட் ஷர்ட், டக் இன் பண்ணி முகம் நிறைய சந்தோஷம், அட கார்த்தி பெரிய மனுஷனாயிட்டானே ...
எங்க வீட்டுக்கு வந்துதான் ஃபீஸ் கட்ட கிளம்பினாங்க.. அப்புறம் காலேஜ் படிக்கறச்ச ரெண்டு மூணு தடவ பொது ஃபங்ஷன்ல பார்த்தேன்..

படிச்சு முடிச்சுட்டு ஒரு அமெரிக்கன் ஷிப்பிங் கம்பெனில வேலைக்கு சேர்ந்தான்... ரொம்ப பிடிச்சு அந்த வேலை செய்யாறான்.. அங்க அவனோட எக்ஸ்பீரியன்ஸ்லாம் விபரமா லெட்டர் போடறான் அப்டின்னு அவனோட அப்பாக்கும் அம்மாக்கும் ஒரே சந்தோஷம்..

ஒரு வருஷம் கழிச்சு, ஒரு நாள் ராத்திரி ஏழு மணி இருக்கும்.. நாராயணனுக்கு ஒரு போன் கால்...அவர் முகம் கொஞ்சம் பதட்டமாறத பாத்துட்டு என்னன்னு போனா, "கார்த்திய காணுமாண்டி"
"என்ன உளர்றீங்க அவன் கப்பல்ல நடுக்கடல்ல தானே போய்ண்டு இருப்பான்.. எப்படி காணாம போவான்"
"அதாண்டி ஒண்ணும் புரியல.. நாகராஜன் ரொம்ப டென்ஷனா இருக்கார்.. என்னய உடனே வர சொல்றார்" நு கிளம்பிட்டார்..

எனக்கு கையும் ஓடல காலும் ஓடல... பகவானேன்னு பெருமாள் படத்துக்கு முன்னாலயே ஒக்காந்துட்டேன்.. "நடந்து மலையேறி வரேன் வேங்கடேசா... கார்த்திக்கு ஒண்ணும் ஆகக் கூடாது... "
ஆனால் பகவான் சித்தம் வேறு மாதிரி போச்சு..

அவன் கிடைக்கவே இல்லை.. ஒரு மாசம் வரைக்கும் இவர் தினம் தினம் நடுராத்திரி வரைக்கும் அமெரிக்கால இருக்கறவங்க கூட கோ ஆர்டினேட் பண்ணி, அங்க போலிஸ் அண்ட் அதர் பீபிள் கிட்ட பேசி.... ஒண்ணும் நடக்கல... சாயங்காலம் வேலை முடிச்சு ரெஃப்ரெஷ் பண்ணிண்டு டின்னர்க்கு வர வேண்டிய பையன் வரலை.. இதுதான் அவங்க வெர்ஷன்...

பசிபிக் கடல், அதீத குளிரில் நடுக்கடலில் என்னவாகியிருப்பான்.... முதல் நாள்தான் இவர்களிடம் அடுத்த மாதம் இங்கு வருவதைப் பற்றி பேசியிருக்கிறான்.. இரண்டே அனுமானங்கள்தான் ஒன்று தற்கொலை அல்லது யாராவது அடித்து கடலில் போட்டிருக்கலாம்... முதல் நாள் சந்தோஷமா பேசின பையன் தற்கொலை பண்ணியிருக்க வாய்ப்பில்லை... எப்பொழுதும் சிரித்த முகத்துடன் அமைதியாக இருக்கும் பையனை அடித்துக் கொல்ல எவனுக்காவது மனசு வருமா தெரில...

எத்தனையோ பிரார்த்தனைகள், எத்தனயோ ஜோசியங்கள்.... எதாவது ஒரு அதிசயம் நடந்து வந்து விட மாட்டானா என்ற எதிர்பார்ர்புடனே இரண்டு வருடங்கள் ஓடின... அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக அவன் இல்லை... வரமாட்டான்.. என்ற மனப்பக்குவத்திற்கு பெற்றோர் வந்தாச்சு...

இன்னும் நான் மலையேறி என் பிரார்த்தனையை நிறைவேத்தல... வரேன் வெங்கி சீக்கிரம்... மிராகுலஸா எங்க கார்த்தி எங்களுக்கு கிடைக்க மாட்டானா என்ற ஏக்கம் இன்னும் அடி மனதில்..


சுபர்ணா பிறந்த நாள் நெருங்கும் போது அவன் நினைவுகள் பாரமாய் அழுத்துவது தவிர்க்கமுடியாமல் போகிறது