Tuesday, June 2, 2015

சேனல் மாத்தினப்ப, ஒரு மூணு வயசுக் குழந்தை அப்பா அம்மாக்கு நடுவில் உட்கார்ந்து கொண்டு, "குரு ப்ரம்மா குரு விஷ்னு" மழலை துளிக்கூட குறையாமல்... நல்லாருக்கேன்னு தொடர்ந்து பார்த்தால் , அடுத்தது, திருக்குறள் , தமிழ் வருடங்கள் 60, நட்ச்சத்திரங்கள் 27, சீதா கல்யாணம், திருப்பாவை 2, ராமாயணம் சுருக்கமாக, சுந்தர காண்டம் (இது இரண்டும் அப்படியே கம்ப ராமாயணத்திலிருந்து),ஐம்பெருங்காப்பியங்கள், யார் எழுதியது.. எந்த காலகட்டம் , சுருக்கமாக சிலப்பதிகாரம், ஒரு தாலாட்டு பாடல்..., ஆய கலைகள் 64, மண்டோதரி பெருமை.. அப்பா மூச்சு வாங்கறது... அடுத்து நம்ம கல்யாணங்களின் முறைகள் நு அந்த அம்மா சொன்ன உடனே.. "படைப்பு மதுரை தூர்தர்ஷன்" வந்ததோ பொழச்சேன்... எப்ப சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சு இருப்பாங்க அந்த குழந்தைக்கு.. இந்த படுத்தல்க்கு எல்லாம் தண்டனை இல்லயா .. எதுவுமே அளவோடு இருந்தால்தான் ரசிக்கிறது..
இன்று காலை, கிண்டில ஷேர் வேன்ல ஆறு பேர் அமரும் இடத்தில் ஒரு இடம் காலியாய் இருந்த போது, அதிகபட்சம் பத்து வயது இருக்கும் பையன், "அண்ணா அடையார் போகுமா" "போகும்.. போகும் ஒருத்தருக்கு இருபது ரூபாய்" சற்று யோசனையுடன் அவன் அம்மாவை பார்க்க அவள் தலையசைத்ததும் வேகமாக வண்டியில் ஏறி, "வாங்க வாங்க எல்லாரும் சீக்கிரம் ஏறுங்க" என்று சொல்லி மூன்று பெண்மணிகள், ஒரு கைக்குழந்தை , ஒரு மூன்று வயது குழந்தை, ஒரு எட்டு வயது பையன், ஒரு சூட்கேஸ் , ஒரு ஏர் பேக் அனைத்தயும் லாகவாமாக ஏற்றி தான் ஸ்டைலாக நின்று கொண்டு, இடையில் சாம்சங் ஸ்மார்ட் போனில் கால் அட்டெண்ட் பண்ணி, எந்த இடத்தில் இறங்கனும்னு ட்ரைவர் கேட்டப்ப, அந்த பெண்கள் பதில் சொல்வதற்கு முன், "கான்சர் ஆஸ்பத்திரி தாண்டி ஒரு கோவில் வரும்ல அது தாண்டினவுடன நா சொல்றேன் அங்க நிறுத்துங்க" இடையிடையே அந்த குட்டி பெண்ணை ஜன்னலுக்கு வெளியே கை விடாமல் பார்த்துக் கொண்டு... "இங்கதாண்ணே வண்டிய நிறுத்துங்க " இறங்கி பாக்கெட்டில் இருந்து நூறு ரூபாய எடுத்துக் கொடுத்து, "மூணு பேருக்கு எடுத்துகிட்டு மிச்சம் கொடுங்கண்ணே "டேய் என்னடா ஒரு ஊரையே ஏத்திட்டு மூணு பேருங்கற" "நாங்கல்லாம் சின்ன பசங்க தானேண்ண" :):)
நேற்று மகனுடய ப்ரீ.கே.ஜி டீச்சரை பார்த்தேன்... (வயசு கொறஞ்சாப்ல ஆச்சு)... கொஞ்ச நேரம் பேசி விட்டு வந்ததில் ஒரு ஃப்ளாஷ் பேக்... அவன் எல்.கே.ஜி படிக்கும் போது நடந்தது... ஒரு நாள் ராதரி எதுக்கோ அவனை கோபித்துக் கொண்ட போது, "நானே இன்னிக்கி ஹெச்.ரூம் வாசல்ல ரொம்ப நேரம் நின்னேன்... கால்லாம் வலிக்கறது... நீ வேற திட்ற"... உடனே மெல்ட் ஆகி, "ஏண்டா செல்லம் இவ்வளவு நாழி சொல்லவே இல்ல... என்னடா கண்ணா ஆச்சு" எவ்ள்வ் கெஞ்சியும் சொல்லவே இல்ல... சரி நானும் அத்தோட விட்டுட்டேன். அடுத்த நாள் அவனை ஸ்கூல்ல விடப் போனப்ப, மேலேருந்து அவனோட ப்ரீ.கே.ஜி மிஸ் கையாட்டி என்ன கூப்டா... மேல போனா.. "பையன் சொன்னானா நேத்து என்ன நடந்ததுன்னு" எனக்கு ஒரே பயமாய்டுத்து... அச்சச்சோ என்ன நடந்திருக்கும்.. "இல்லியே " "நேத்து இவன் க்ளாஸ் டீச்சர் லீவு.. வேற டீச்சர்தான் இவங்கள பார்த்திட்டிருந்திருக்காங்க... அப்ப இவன் ஒரு பையன தூக்கி சுத்தியிருக்கான்... (எனக்கு அசந்தர்ப்பமா சிரிப்பு வந்தது... இவன் கொஞ்சம் ஆகிருதியான பையன்.. ஆனால், விஷமம், சேட்டை அடி தடில்லாம் எப்பவுமே கிடையாது) அதுக்கு அந்த டீச்சர் டேய் அவன கீழ போட்டேன்ன அவங்க அப்பா அம்மாக்கு யார்றா பதில் சொல்றதுன்னு கேட்டுருக்காங்க.. அதுக்கு இவன் திமிராய் நான் சொல்லிப்பேன்னு மரியாதை இல்லாம சொல்லி இருக்கான்... மேட்டர் ஹெ.எம் வரைக்கும் போய், அப்புறம் என்னாலதான் அவன மேனேஜ் பண்ண முடியும்னு கூப்டாங்க... நான் போய் அந்த மிஸ்கிட்ட சாரி கேளுடான்னு சொன்னதுக்கு சாரி. பூரி குப்பை தொட்டி லாரின்னு சொல்றான் ... டோடல் மிஸ் பிகேவியர் ... போன வருஷம்லாம் இப்படி இல்ல... ஹீ இஸ் நோ மோர் ய சைல்ட்... அடுத்த வருஷம் ஹையர் க்ளாஸ் போறச்ச (எனக்கு ஒரு டவுட்டு பய புள்ள புத்திசாலியா இருக்கானுட்டு அடுத்த வருஷம் பத்தாவதுல. போட்ருவாங்களோன்னுட்டு) இதெல்லாம் எண்டெர்டெயின் பண்ண மாட்டாங்க... நீங்க கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க ".... அப்பா ஒரு வழியா மூச்சு விட்டாங்க .... சரி என்று சொல்லி விட்டு வந்தேன்.... ஆனால் எல்லா டீச்சரையும் உட்கார வச்சு அட்வைஸ் பண்ண சந்தர்ப்பமே கிடைக்காமல் போச்சு ஒரு வருடத்தில் அவனை வேறு பள்ளியில் சேர்த்ததால்...
சென்னையப் பத்தி என் முதல் அனுபவம்.. படிக்கறச்ச லீவுக்கு மாமா வீட்டுக்கு வந்து துணைகளோடயே சுத்தினது கணக்குல சேத்தி இல்ல... கல்யாணமாகி, ட்ரான்ஸ்ஃபர்ல இங்க வந்த உடன், வீடு வட பழனி, ஆபிஸ் பீச் ரோட் லைட் அவுஸ் கிட்ட... வடபழனிலேர்ந்து பட்டினப்பாக்கம் போய் அங்க இருந்து இன்னொரு பஸ் பிடிச்சு லைட் ஹவுஸ் போகனும்... பட்டினப்பாக்கத்துல வெயிட் பண்ணினப்போ, எதோ ஒரு பஸ் வந்தது... வேகமா ஓடிப் போய் லைட் ஹவுஸ் போகுமான்னு கேட்டேன்.... ப்ரக்ஸ்பதி பதிலுக்கு பாரிஸ் போற பஸ்தாம்மான்னான்.... நா உடனே பாரிஸ் போகும் சரி, லைட் ஹவுஸ் போகுமான்னேன்... உடனே பக்கத்துல இருந்த லேடி சிரிச்சு , எல்லா பஸ்ஸும் லைட் ஹவுஸ் தாண்டிதாம்மா பாரிஸ் போகும்னாங்க... அசடு வழிய ஏறி ஆபிஸ் போனேன்.. சாயங்காலம், மறுபடியும் பல்பு வாங்கக் கூடாதுன்னு, எல்லா பஸ்ஸும் பட்டினப்பாக்கம் போகும்னு வந்த பஸ்ல ஏறி டிக்கட் கேட்டா, இறங்கும்மா இது மந்தைவெளி போற பஸ்ஸுங்கிறார் கண்டக்டர் .. சரின்னு இறங்கறத்துக்குள்ள முன்னால இருந்த புண்னியவான் வண்டிய கிளப்பிட்டான்... தொபேல்னு கைய தரைல ஊனி விழுந்துட்டேன்... கைய தூக்கவே முடியல... எப்படியோ ஆட்டோல ஏறி வீட்டுக்கு வந்து, அயோடக்ஸ், அமிர்தாஞ்சன் பாட்டில் எல்லாம் காலி பண்ணியாச்சு... ராத்திரி வலி ஜாஸ்தி ஆன உடன் சூர்யா ஹாஸ்பிடல்ல காமிச்சா, அவங்க எக்ஸ்ரே எடுத்து, ஃப்ராக்சர்னு கன்ஃபார்ம் பண்ணி, அட்மிட் பண்ணி அடுத்த நாள், பச்சை அங்கி போட்டு அனஸ்தீஷியாலாம் கொடுத்து மாவு கட்டு போட்டு அதுக்கும் அடுத்த நாள் வீட்டுக்கு அனுப்பினாங்க .... ஃப்ராக்சர்க்கு இதெல்லாம் கொஞ்சம் ஓவர்... அப்ப கோட் கோபி கூட இல்ல கம்ப்ளெயிண்ட் பண்ண... அப்புறம் என்ன பதினஞ்சு நாள் எல் கையோட சுத்தினேன்... அதுக்கப்புறம் உஷாரா ஒரு தடவைக்கு பத்து தடவ பத்து ஆள் கிட்ட விசாரிச்சுட்டுத்தான் எந்த பஸ்லயும் ஏறுவேன்..
அப்பா அம்மா நடுவில் அமர்ந்து நம்மை எட்டிப் பார்த்து சிரிக்கும் குட்டி பாப்பா குதிரை போன்ற பைக்கை வ்ரும் வ்ரும் என்று உறும விட்டுக் கொண்டிருக்கும் இளைஞன் ஷேர் ஆட்டோவில் எட்டு கதைகள் சொல்லும் எட்டு முகங்கள் குடும்ப பாரத்தை லிட்ரலா சுமக்கும் ஆண்கள் - பைக்கில் முன்னால் பத்து வயது மகன், பின்னால் வயதில் பெரிய மகள் மற்றும் மனைவியுடன்.... பஸ்ஸில் ஜன்னலோரத்தில் அமர்ந்து எதையோ நினைத்து புன்னகைத்து வரும் இளம்பெண் அருகில் சிந்தனை தோய்ந்த முகத்தில் ஒரு நடுத்தர வயது பெண் காரில் பொருத்திய சிறிய டிவியில் படம் பார்த்த படி வரும் வசதி படைத்தவர்கள் பத்து ரூபாய் கலரிங் புத்தகத்தை விற்க ஒவ்வொரு வண்டிக்காக அண்ணா, அக்கா என்று ஓடும் ஏழைக் குழந்தைகள் .. இரண்டு நிமிட ட்ராஃபிக் ஜாம் தரும் சுவாரசியங்களும் முரண்களும்
பத்து நொடிக்கொரு முறை தொடு திரை விலக்கி புதுத் தகவல்கள் சரி பார்த்து இருந்தால் பதிலளித்து இல்லாவிடில் அடுத்த பத்து நொடிக்கு காத்திருந்து கடந்து செல்லும் மணித்துளிகளில் நாளின் பிற வேலைகளும் எவ்வாறோ முடிகிறது
என் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி தன் மகளுக்கு உடம்பு சரியில்லை என்று ஒரு வாரமாக வேலைக்கு வரவில்லை... இன்னிக்கி கார்த்தால ஆறு மணிக்கு அவ கிட்ட இருந்து ஃபோன். கொஞ்சம் டென்ஷனாத்தான் ஃபோன எடுத்தேன்.. “அக்கா இன்னிக்கி வேலைக்கு வந்த்ருவேன்” “பொண்ணு எப்டி இருக்கா” “அதுக்கு பேய் பிடிச்சுருச்சுக்கா... அது தெரியாம ஆஸ்பத்திரிக்கு இட்டுகினு போய், மண்ட ஸ்கேன்லாம் வேற எடுத்தோம்.. அப்புறம் பக்கத்து வீட்டு அக்கா சொல்லிச்சுனு கார் எடுத்துகிட்டு காஞ்சிபுரம் போய் அங்க ஒருத்தரு கிட்ட மந்த்திரிக்க கூட்டி கிட்டு போனம்.. அவருதான் கண்டுபிடிச்சு மாங்காடுல ஒரு அம்மாவ பாக்க சொன்னாரு.. நேத்து மாங்காடு கூட்டிகினு போனம்.. அந்தம்மா இன்னும் முன்னாலயே கூட்டு வந்த்ருக்கலாம்லனு திட்டிச்சு.. (வெள்ளை கோட் டாக்டர் மட்டும்தான் இந்த டயலாக் அடிக்கனுமா). ஒண்ணும் கவலப்படறதுக்கில்லக்கா.. உச்சி மண்டைல இருந்து முடி எடுத்து மந்திருச்சு மரத்துல வச்சு ஆணி அடிச்சுட்டா எல்லாம் சரியா போய்டும்கா... நான் கூட கல்யாணம் வச்சுருக்கே என்ன உடம்பு வந்த்ருச்சோன்னு பயந்துட்டென்.. (வாய் கொள்ளா சிரிப்பு வேற)... அது புது வருஷத்தின்னிக்கி ராத்ரி ஃப்ரெண்ட்ஸ் கூட வெளில போய்ட்டு வந்துச்சுக்கா.. அப்பத்தான் பேய் பிடிச்சுருச்சு... பேய் ஒடம்புல இருக்க சொல்லத்தான் பத்து நாளா ஒண்ணுமே சாப்பிடல” “என்ன இப்பிடி பேசற.. ஸ்கேன் ரிஸல்ட் என்ன ஆச்சு? டாக்டர் என்ன சொன்னார்” “என்னக்கா வெவரம் இல்லாம பேசற.. அதுதான் பேய் பிடிச்சுருக்குனு கண்டு பிடிச்சிட்டம்ல...ஸ்கேன் ரிப்போர்ட்டு லாம் வாங்கவே இல்ல” என்னத்த சொல்ல.. திருந்தாம போச்சே ஊரு சனம் தான்
என்னுடைய மகள் பத்தாவது படிக்கும் போது தினமும் ஸ்கூட்டியில் ட்யூஷனுக்கு விடுட்டு முடியற வரைக்கும் அங்கேயே சில அம்மாக்கள் நாட்டு நடப்பெல்லாம் (?) பேசிட்டு ட்யூஷன் முடிஞ்சவுடன கூட்டிட்டு வரது வழக்கம்... அதனால் கிடைத்த சில நட்புகள் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்கள்... பதினோராம் வகுப்புக்கு மகள் வேறு பள்ளி சேர தொடர்பு சற்று குறைந்து போனது. அவள் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது திடீர்னு ஒரு கால், பழைய ட்யூஷன் நட்பு, "சுபர்ணா அம்மா.. நீங்கதானே" "ஆமாம் நாந்தான் சொல்லுங்க" "இல்ல.. இன்னொரு கால் வரது அப்புறம் பேசறேன்" ஒண்ணும் புரியல... கொஞ்ச நேரம் கழிச்சு இன்னொரு அதே நட்பு வட்டம் "ஜெயந்தி எப்டி இருக்கேள்... உங்களுக்கு ஒண்ணுமில்லயே" என்று படபடப்பான குரல்.. "எனக்கு ஒண்ணுமில்லயே என்னாச்சு" "ஒண்ணுமில்ல.. நீங்க நல்லாருக்கேளா" "அடக்கடவுளே நான் நல்லாத்தான் இருக்கேன்.. சொல்லுங்கோ" "சரி இந்த விக்னேஷ் அம்மா என்னய ரொம்ப குழப்பிட்டங்க.. ரொம்ப டென்ஷன் ஆயிட்டேன்..அதான்" "ஆமாம் இப்பத்தான் கொஞ்ச முன்னால கால் பண்ணினாங்க... உடனே வச்சுட்டாங்க..என்ன விஷயம்" "இல்ல எப்படி சொல்றதுன்னு..." "அட சொல்லுங்க சஸ்பென்ஸ் தாங்க முடியல என்னதான் ஆச்சுங்க" "இல்ல...அவங்க கேள்விப்பட்ட செய்தி.. ட்யூஷனுக்கு டாலா ஒரு பொண்ணு வருமே... அவங்கம்மா பிங்க் ஸ்கூட்டில வருவாங்களே அவங்க ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டாங்க அப்டின்னு... சரி விடுங்கோ ... உங்களுக்கு ஆயுசு நூறு" ஒரு சிரிப்புடன் அதை கடந்து விட்டேன்... ஆனால் உண்மை தெரிந்து மனசு ரொம்ப பாரமாயிடுத்து.. என் மகள் செட்ல இருந்த ஒரு பெண்ணின் அம்மா, தன்னுடைய இன்னொரு பெண்ணை எதோ ஒரு க்ளாஸில் விட்டுவிட்டு அந்த கேப்ல காய் வாங்கி வரும் போது விபத்து.. ஸ்பாட்ல உயிர் பிரிந்து விட்டதாம்.. சொல்ல விட்டது....டாலான அந்த பெண்ணும் அவங்க வீட்டு பிங்க் ஸ்கூட்டியும்..
நான் அப்ப ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்தேன்... ஶ்ரீரங்கத்தில் நீஈஈஈஈளமான வீடு....நமக்கு உபயோகமே படாமல் பெருக்கி மொழுகற வேலை வைக்கும், 3x6" க்கு வாசலிலிருந்து ஹாலுக்கு போவதற்கு முன் மூன்று ஹால் தாண்டி மூன்று தாழ்வாரங்கள் உண்டு... அதில் ஒன்றில் கிச்சனுக்கு எதிர்தாப்ல ஒரு பெரிய உரல் இருக்கும்... அப்பல்லாம் அதுலதான் இட்லி தோசைக்கு அரைக்கறது... அந்த உரல் மேல ஒரு ஜன்னல்.. அது வழியா பக்கத்தாத்து ரிடயர்ட் ஹிந்தி டீச்சர் ஹிந்து பேப்பர் வாங்கி படிச்சுட்டு கொடுப்பா... நான் காலேஜ் முதல் வருடம் படிக்கறச்ச அவங்க இறந்துட்டாங்க... ஒரு மாசம் போயிருக்கும்... நான்பாட்டுக்கு எதோ பாடிண்டு கிச்சன் பக்கம் போறேன்.. ‘’ ஜெயந்தி பேப்பர் தரியா’” – டீச்சரோட குரல்.. அம்மாஆஆஆஆஅ என்று அலறிய படியே வாசலை நோக்கி ஓடினேன்… என் கூச்சல் வாசலிலிருந்த அம்மாவ ரீச் பண்றத்துக்குள்ள பின்னாலருந்து பெரிய சிரிப்பு சத்தம்.. பயத்தோட திரும்பி பார்த்தா… அண்ணா … கைல கெடச்சதெல்லாம் விட்டு எறிஞ்சேன்… இது எதுவுமே தெரியாத அம்மா கொஞ்ச நேரம் கழிச்சு வந்து, ‘எதுக்கு எல்லாத்தயும் கூடம் பூரா எறச்சுசுருக்க… ’ ‘’இல்லம்மா… இவன் என்ன பண்ணான் தெரியுமான்னு ஆரம்பிச்சு ஒரு பிளாக்கனம் பாடினா… ‘’நம்மாத்துக்குள்ள யாரு வரப் போறா’ இதுக்கெதுக்கு இவ்வளவு ஆகத்தியம் பண்ணிண்டுருக்க’’… அம்மா போனவுடன ஒரு மணி நேரத்துக்கு அவன திட்டி திட்டி அழுதப்புறம் தான் பயம் போச்…
சிக்குத் தலை அழுக்கு உடை
 கையில் ஒரு கந்தல் மூட்டை,
மொத்த சொத்து
நிலை குத்திய பார்வை சில நேரம்
வாய் நிறைய சிரிப்பு  சில நேரம்
தான் யாரென்று மறந்த நிலை
கவலை இல்லை
மகிழ்ச்சி இல்லை
கோபம் இல்லை
நண்பன் இல்லை
எதிரி இல்லை
உறவு இல்லை
வாழ்வைப் பற்றிய சிந்தனை இல்லை
சாவைப் பற்றிய பயமும் இல்லை..
நிம்மதியாக்தான் தெரிகிறது இந்த வாழ்வு
பஸ் ஸ்டாப் அருகில் உள்ள மரத்தடியில்
நான் தினமும் பார்க்கும் சாலையோர ஞானி....
இன்று அங்கே ஒரே கூட்டம்..
ஆமாம் இப்ப அவருக்கு உயிரும் இல்லை
கவலைப்படவும் யாருமில்லை...
இன்று மாலை நடையின் போது இரண்டாவது சுற்றில் ஒரு சிறிய நாய் அருகில் வர, நான் பயத்தில் கத்தி நகர, அது தந்த உற்சாகத்தில் அது என்னை துரத்த, நான் இன்னும் அதிகமாக கத்தியதில் அது பயந்து என்னை தாண்டி ஓட, இப்ப பதறிப்போய் அந்த நாயின் சொந்தக்காரர் ஓடி வந்து அதை தூக்கிக்கொண்டார். நான் இன்னும் பயம் தீராமல் அவரிடம் நாயைக் கையில் பிடித்துக்கொள்ளாமல் போனதற்காக சத்தம் போட்டு விட்டு நடையை தொடர்ந்தேன். அடுத்த சுற்றில், நா.சொ.கா "excuse me, one minute" என்றார். நான் பாதுகாப்பான தூரத்தில் நின்று கொண்டு, என்ன என்றேன். "he is just just kid , அதான் ஃபரீயா விட்டேன். _ அவர் முகத்தில் நான் அதை நாய் என்று சொன்னதால் வந்த காயம் இன்னும் இருந்தது. நான் பேசாமல் மண்டை ஆட்டி விட்டு நகர்ந்து விட்டேன். எனக்கு நாயில் குழந்தை, வளர்ந்தது என்ற பேதம்லாம் கிடையாது.. எது கடிச்சாலும் ஊசிதானே
எனக்கு எப்பவுமே செல்ல ப்ராணிகள்ன ஒரு அலர்ஜி..ஒரு முறை நான் கடைக்குப் போன போது ஒரு அம்மணி தன் ப்ரிய நாயையும் கடைக்கு கூட்டி வந்திருக்கிறாள் .. நான் சாமான் வாங்கிட்டு திரும்பினா கால் கிட்ட நாய், நான் அலறினவுடன, "ஜுஜு .. ஆன்டி பயப்படராங்க பாரு.. இங்க வந்துடு .." ஜுஜு என்னை தொல்லை பண்ணாமல் போனாலும் அதுக்கு ஆன்டியான கடுப்பு எனக்கு.. இன்னொரு நாள், கார்த்தால வாசல் தெளிக்கப் போனா, கண்ணுக்குட்டி ஸைஸுக்கு ஒரு நாய் வேகமா என்னை நோக்கி ஓடி வர, நான் அலறிய அலறலில் அக்கம்பக்கத்தில் நாலஞ்சு ஜன்னல் திறந்து மூடின ... சரியா அது எனக்கு அரை அடி முன்னால வரச்ச, டைகர்னு அதனுடைய வளர்ப்பன் கொடுத்த குரலுக்கு அப்படியே நின்னது... உசிர் போய் உசிர் வந்தது.. பயமும் கோபமும் டைரெக்ட்லி ப்ரொப்போஷனலா, அதனால் செமையா கத்தி விட்டேன் அந்தாள , கயிறு போட்டு நாயை கட்டாதத்துக்கு... "பாக்கத்தாங்க பெருசு.. அது கொழந்தங்க.. ஒண்ணும் செய்யாது"செய்யுமோ செய்யாதோ .. என் பக்கத்துல வரப்டாது ... ஆனா என் மகனுக்கு எதாவது ஒரு ஜீவன எடுத்துண்டு வந்து வளக்கனும்னு ஒரே ஆசை.. பன்னி, நாய், பூனை, முயல், கிளி எல்லாம் கேட்டுப் பார்த்தான்... நானா அலவ் பண்ணுவேன்... போன மாசம், வொயிட் வாஷ் பண்ணும்போது, ஒரு வீட்டு சாமானையும் ஒரு ரூம்ல போட்டு வச்சுருந்தோம்... எல்லா சாமானுடனும் மளிகை சாமானும் உண்டு.. அதனால், பொழக்கத்தில்தான் அந்த ரூமை வைத்திருந்தோம்.. எப்பாவோ கெடச்ச கேப்ல ஒரு பூனை தன்னுடைய குட்டியுடன் கட்டிலில் சாமான்களுடன் சாமானாய் ஏறி உட்கார்ந்திருக்கு.. எதையோ எடுக்கப் போன என் கணவர், "அந்த ரூம்ல பூனை இருக்கு"நான் நம்பல .. "இப்பத்தானே நான் அங்க போய் ப்ளேட்லாம் வச்சுட்டு வந்தேன்"ரூமுக்குள்ளே இருந்த மகளுக்குத் தெரியாமல் எட்டி பார்த்து உறுதி செய்த பின், அவளை வெளியே கூப்டு விஷயம் சொன்ன உடனே அலறினாள் .. எங்க மூணு பேருக்குமே டென்ஷன்....இவ்வளவு சாமானுக்கு நடுவுல இத எப்படி வெளிய தொரத்தறது... அப்பத்தான் வெளில போயிருந்த அபு (மகன்) வந்தான்.. விஷயத்த சொன்ன உடன, ஆயிரம் வாட்ஸ் பல்ப் மொகத்துல.. எங்க எங்கன்னு ஆசையா போய் பார்த்தான்... அம்மா ஸோ ஸ்வீட் மா.. இங்கயே இருக்கட்டும்மா "டேய் ஏற்கனவே ரூம் நிறைய சாமான்.. உனக்குத்தான் பயம் இல்லல்ல .. அதைக் கொண்டு போய் மொதல்ல வெளில விடுடா .."உள்ள போனான்.. கொஞ்ச நேரத்துல வந்து, ஒரு ப்ளாஸ்டிக் கவரும் ஒரு அட்டை டப்பாவும் கேட்டான்.."பெரிய பூனை கொஞ்சம் அக்ரஸிவா இருக்கு.. அதான் க்ளவுஸ் மாதிரி இந்த கவர போட்டுக்கபோறேன்"உள்ள போய் கதவ சாத்திண்ட்டான்... அஞ்சு நிமிஷம் போறதுக்குள்ளே அரை மணி ஆன மாதிரி ஆய்டுத்து... அப்பூன்னு கொரல் கொடுத்தவுடன வெளில வந்தான்"குட்டிய வேகமா கைல எடுத்தா அது ஹர்ட் ஆயிடும்னு மெதுவா பார்த்து எடுக்கறச்ச அந்த பெரிய பூனை வந்து அத வாயில கவ்விண்டு கட்டிலுக்கு அடில போய்டுத்து.... கேக்கவே எனக்கு டென்ஷன்.."என்னடா பண்றது இப்ப"இரும்மா என்று உள்ளே சென்றவன் கொஞ்ச நேரத்தில் வாயில் புன்னகை, பெட்டியில் பூனைக்குட்டியோடு வந்தான்.."எப்டிடா" "கம்ப வச்சு லேசா சவுண்டெழுப்பினப்ப, பெரிய புனை பயந்து ஜன்னல் வழியா போய்டுத்து.. அப்புறம் இத தூக்கிண்டு வந்துட்டேன்..""சரி சரி மொதல்ல கொண்டு போய் அத வெளில விட்டுட்டு வா"அவனிடம் சொல்லியபடியே, எல்லா ஜன்னல் கதவுகளையும் சாத்தினேன்..."என்னடா இன்னும் போலியா"" இந்த குளிர்ல போய் அத வெளில விடனுமா"புலம்பியபடியே விருப்பமில்லாமல் அதை வெளியே விட்டுட்டு வந்து ஏம்மா இவ்வளவு க்ரூயலா இருக்கன்னு கேட்டுட்டு போய்ட்டான்." தெர்ல... என்னால வேற மாதிரி இருக்க முடியல
தலை நரைத்து ,நாளாச்சு ஞானம் வர நாள் இருக்கு நடுவாக நான் இருக்கேன் அரை சதம் நெருங்கியாச்சு ஆணாகா பிறக்கவில்லை என ஏக்கம் பல நாளாய்.. ஆண் போல பல வேலை பெண்ணிங்கு செய்தாலும் ஆணுக்குள்ள சுதந்திரம்தான் பெண்ணுக்கில்லை என நினைத்தேன் கிட்டாத சுதந்திரம்தான் அவளுக்கான் வரம் என்று புரிந்து கொண்ட பின்னாலே பெண்ணாக இருப்பதிலே பெருமைதான் கொள்கின்றேன்

பைக்கோத்ஸவம்

திடீரென்று ஒரு நாள் நாராயணன் "இன்னிக்கி ஆபிஸ்க்கு ஸ்கூட்டர் எடுத்துண்டு போறியா... ஓட்ட முடிஞ்சதுன்ன இன்னொரு டூ வீலர் வாங்கிடலாம் .." உடனே எக்ஸைட் ஆயிட்டேன்... வீட்டிலிருந்து ஆபிஸ் 13 கிலோமீட்டர் அதுவும் கிண்டி தாண்டி போவது எனக்கு கொஞ்சம் சவாலான விஷயம்தான்..காலைல ரொம்ப கஷ்டமில்லாமல் போய்விட்டேன் ... சாயங்காலம் கூட கிண்டி ப்ரிட்ஜ் கிட்ட மட்டும்தான் ஒரு டெம்போ கிட்ட வந்து ஹாரன் அடிச்சு க்ளோஸா போனதுல கொஞ்சம் பயந்துட்டேன்... ஆனாக் கூட தினமும் போகும் அளவு நம்பிக்கை வரலை... சரி எப்படின்னாலும் வீட்டுக்கு இன்னொரு வண்டி தேவைப்பட்டதால் வாங்கிடலாம்னு முடிவு பண்ணி ஹோண்டா ஷோ ரூம் போனோம்... ஆக்டிவாவோட அழகான காதலி மாதிரி ஸ்லீக்கா அழகா ஆக்டிவா ஐ.. எவ்வளவு சிசி, எவ்வளவு மைலேஜ் கொடுக்கும்னுலாம் இவர் கேட்டுக் கொண்டிருக்க, நான் எந்தக் கலரில் ஐ அழகி இன்னும் அழகாயிருக்கிறாள் என்று பார்த்துக் கொண்டிருந்தேன்..., "சும்மா சொல்லுவாங்க சார் 55 லாம் வராது... அதுவும் லேடிஸ் ஓட்டினா இன்னும் கம்மியா வரும்..திடீர்னு ஆக்ஸிலேட்டர் ரைஸ் பண்னுவாங்க, டகால்னு கொறைச்சுடுவாங்க... ப்ரேக் அதிகமா பிடிப்பாங்க ..." (எவண்டா இவன் நா வண்டி ஓட்றத பக்கத்துல இருந்து பார்த்தாப்ல சொல்றான்)... அப்படியே கண்ண விட்டுண்டு வந்தப்ப, மஞ்சள் கலர்ல, மெஜஸ்டிக்கா நின்ன அந்த வண்டியின் அழகப்பார்த்து கிட்ட போய் சீட்டை தடவிக்கொண்டிருந்த போது, " மேடம் டியோ மேடம்... செம பிக்கப் இருக்கும் காலேஜ் கேர்ல்ஸ்லாம் இதான் விரும்பாராங்க.. " " ஜெயந்தி ஓவர் பிக்கெப் உடம்புக்கு ஆகாது.. எடத்த காலி பண்ணு.." மறுபடியும் ஆக்டிவா ஐ கிட்டயே வந்து, டெஸ்ட் ட்ரைவ் கேட்டு ஓட்டிப் பார்த்து, ஒரு வாரத்துல வெள்ளை நிற வண்டிய புக் பண்ணியாச்சு.... " சார் ரெஜிஸ்டிரேஷன் முடிஞ்சு சனிக்கிழமை காலைல எடுத்துக்கங்க சார்".. சனிக்கிழமை அப்படி இப்படினு காத்திருக்க வச்சு 12 மணி ஆக்கிட்டான்.... "லாங் டிஸ்டன்ஸ் போப்போற கையோட ஹெல்மெட் வாங்கிக்கோ ... நீ வண்டிய எடுத்துண்டு வீட்டுக்கு போ, நான் ஆபிஸுக்கு போறேன். ,"_ இவர் நான் இது வரைக்கும் ஹெல்மெட் போட்டதே இல்ல... உத்தமபுத்திரன் க்ளைமேக்ஸ்ல சிவாஜி அந்த கவசத்த போட்டுண்டு குதிரைல பறக்கர மாதிரி நானும் வண்டில ஏறிட்டேன்... கொஞ்ச தூரம் போன உடனே ஆஃப் ஆயிடுத்து.. அப்புறம் நூறு மீட்டருக்கு ஒரு தடவ ஆஃப் ஆகி ஆஃப் ஆகி ஓடித்து... ஒரு பக்கம் ஹெல்மெட் வேற அவஸ்தையா இருக்க, காலை தரையில் ஊனப்போக கால் எட்டாமல் செருப்பு கழல , அதை சரி செய்த படியே காலை மேலே தூக்கி வண்டியை ஓட்டினால், கால் பக்கம் எதோ ஒரு சங்கடம்... எதோ சிக்கிக் கொண்டிருந்தது... பயந்து பயந்து வண்டியை மெதுவாக விட்டபடியே பார்த்தால் , செருப்பு புடவைக்குள் நன்றாக சிக்கிக் கொண்டிருந்தது... ஒரு மாதிரியாக, செருப்பு, புடவை, ஹெல்மெட், ஆஃப் ஆகும் வண்டி எல்லாத்தயும் சமாளித்து ஒரு வழியா வீடு வரத்துக்குள்ள போதும் போதும்னு ஆயிடுத்து... அப்புறம் திங்கட் கிழமை வண்டியை சரி செய்து புதன் கிழமை வெற்றிகரமாக ஆபிஸ்க்கு எடுத்தாச்சு... அன்றும் போகும் போது பிரச்சனை இல்லை... வரும் போது காந்தி மண்டபம் தாண்டி இடது பக்கமே போகாமல் எப்படியோ ரோட்டின் நடுவிலே வந்து விட்டேன்... ப்ரிட்ஜ் ஏறி இறங்கி லெஃப்ட் போகவே முடியல... முழுக்க முழுக்க ,கடைசில கிண்டிக்கு இடது புறம் திரும்பும் வரை... இரண்டு புறமும் சல் சல்லுன்னு செம்ம வேகமா யம கிங்கரர்களா போறாங்க...,"நமோ நாராயணா, நமோ நாராயணா.... கிட்ட எதாவது வண்டி வந்துட்டா நமோஓஒ நாராயணா ந்னு இன்னும் கொஞ்சம் ஷேக்கோட.." நான் எப்படி வண்டி ஓட்டினேன்னே புரியல.. மவுண்ட் வர வரைக்கும்... அதுக்கப்புறம் பரவால்ல... ராத்திரி படுத்தா ஒரே பயம் பயம்மா போச்சு... இன்னிக்கி இத்தனைக்கும் ஒரு பஸ் கூட நம்மல க்ராஸ் பண்ணல... அது வேற வந்தா என்ன ஆகும்.. கனவெல்லாம் என்னய சுத்தி பைக்கும் காருமாகவே ஓட, கார்த்தால எழுந்து, "இதெல்லாம் சரிப்பட்டு வராது நா பஸ்லயே போறேன்னு அழாத குறையா சொன்னேன்.. சரி பயமா இருந்தா இந்த ரூட்ல போகாத கோட்டூர்புரம் வழியா போன்னார் இவர். ஒரு நாள் கேப் விடுவோம்னு பஸ்ல ஆபிஸ் போனா உடன் வேலை செய்யற பையன் டி நகர், போய் பார்க் ஷெரட்டன் வழியா ஆந்திர மகிள சபா வந்து அடையார் வர ரூட் போட்டு கொடுத்தான்.... அது பெட்டரா இருந்ததால அடுத்த நாள் விசாரிச்சுண்ட்டே போனேன்... ஆந்திர மகிள சபா வரைக்கும் கரெக்டா போனேன்... அங்க ஒன் வே.. அதுனால சுத்திட்டு வந்து ரைட் எடுக்கனும், தப்பா லெட் எடுத்துட்டேன். போயிண்டே இருக்கேன்... அடையார் மாதிரியும் இருக்கு ...இல்லாத மாதிரியும் இருக்கு, ஒரு சிக்னல்ல ஆட்டோக்காரர் கிட்ட, "இன்னும் அடையார் எவ்வளவு தூரம் போகனும் "நு கேக்க, "ஆப்போஸிட் சைட்ல ரெண்டு கிலோ மீட்டர் மேல வந்துட்டீங்க, யூ டர்ன் எடுத்து நேர போங்க" என்று வழி சொல்ல ஒரு வழியா ஆபிஸ் வந்து ரீடிங் பார்த்தா இருபது கிலோ மீட்டர் வந்துருக்கேன்... சாயங்காலம், மறுபடியும் அதே ரூட் கொஞ்சம் வழி மறந்து, ஆர்.ஏ புரத்தில் சுத்தி, டி.நகர் ட்ராஃபிக்கில் மாட்டி, ஒரு வழியாக வீடு வந்த போது கை காலெல்லாம் பார்ட் பார்ட்டா வலி எடுக்க.... வீட்டுக்குள் நுழைந்த உடனேயே, "நவராத்திரி வெள்ளிக்கிழமை யா இருக்கு... அக்கம்பக்கத்துல போய் அழைச்சுட்டு வெத்தலை பாக்கு வாங்கிண்டு வா" என்று மாமியார் சொன்னதும்... ஓன்னு அழனும் போல இருந்தது... நோ.. நோ.. வெள்ளிக்கிழமை விளக்கு வச்சு... நோ சான்ஸ்... முகம் கழுவி ஒட்ட வைத்த புன்னகையுடன் வெ.பா வாங்க கிளம்பினேன்.. அத்தோட டூ வீலருக்கு மங்களம்... சுப மங்களம். பாடியாச்சு..
வானம் எனும் கடலினிலே
விண்மீன்கள் நீந்தி வர
 வெண்ணிற ஓடமாக நீ
எங்கு செல்கிறாய் வெள்ளி நிலவே.

வானம் எனும் வீதியிலே
நட்சத்திர சொந்தம் தொடர்ந்து வர
 ஊர்வலமாக நீயும்
எங்கு செல்கிறாய் வண்ண நிலவே

வானம் எனும் மெத்தையிலே
மேகமெனும் தலையணை மேல்
நிம்மதியாய் உறங்காமல் நீ
 எங்கு செல்கிறாய் வெண்ணிலவே

வானம் எனும் சிறையினிலே
விண்மீன்கள் காவலாக
எத்தனை நாள் அடைந்திருப்பாய் வெண்ணிலவே
ஆவலுடன் உனைக்காண இங்கு நான் காத்திருக்க
மேகத்திரையின் மறைவினிலே
கண்ணாமூச்சி விளையாட்டாய
எங்கு ஒளிகின்றாய் பிள்ளை நிலவே...

அலைகள்

ஆழ்கடல் மேடையிலே
அசைந்தாடும் நர்த்தகி போல்
நளினமாய் நடனமிட்டு
கரை தொடும் பேரலையே..

ஆழ்கடல் வீதியில்
துள்ளி விளையாடும் சிறு பிள்ளை
தாயாக கரையை எண்ணி
முத்தமிடும் பேரலையே..

ஆழ்கடல் களத்தினிலே
போரிடும் வீரனை போல்
ஆக்ரோஷமாய் சண்டையிட்டு
கரை கண்டு அமைதியான பேரலையே..

ஆழ்கடலெனும் தாய்க்கு
அடங்காது ஓடி வந்து
கரையெனும் தகப்பனுக்கு பயந்து
 பின் செல்லும் பேரலையே..

ஆழ்கடல் ப்ரஞ்சத்தில்
புயலாய் ஆர்ப்பரித்து,
பின் தென்றலாய் அசைந்து வந்து,
என் பாதம் கழுவும் பேரலையே

தென்றல்

இயற்கையின் செல்லக் குழந்தையாய்
தவழ்ந்து வந்து
மலையில் ஏறி
நதியில் நீந்தி
மரம் செடியுடன் கை குலுக்கி
பகல் நேர வெப்பம் தணித்து
எனைக் குளிர வைக்க
ஓடோடி வந்த தென்றலே

மலர்களை தழுவி வந்து
எங்கும் மணம் பரப்பி
இனிய பாடலொன்றை
இதமாய் சுமந்து வந்து
உறங்கிய என்னை தட்டி எழுப்பி
கூந்தலை வருடி
காதோடு ரகசியம் சொன்ன
எனதருமை தென்றலே....

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்

எப்பவுமே ஸ்க்ரூ. ட்ரைவர பார்த்தா எனக்கு கை நமநமன்னும்.. எதாவது வீட்ல ரிப்பேர் வொர்க் இருக்கான்னு பார்த்துண்ட்டே இருப்பேன்.. பெருசா எதுவும் தெரியாது.. கழட்டித்தான் பார்ப்பொமேன்னு தோணும்.. அதுல சில சமயம் க்ளிக் ஆயிடும் .. அதனால எதாவது சரியில்லன்ன (இத வச்சு பசங்கள ஒண்ணும் சரி பண்ண முடியல) நம்மலத்தான் கூப்டுவாங்க.. வீட்ல வொயிட் வாஷ் பண்ணினதுல லாண்ட் லைன் ஒரு மாசமா வொர்க் பண்ணல.. "நீங்க எல்லாரும் ஆளுக்கு ஒரு செல் போன் வச்சுண்டு இருக்கேள் .. எல்லாரும் வெளில போய்ட்டா எனக்கு பேச இந்த போன சரி பண்ணித்தரக்கூடாதா" .... மாமியார்.. சரின்னு என்னோட திறமைய வச்சு, மாடில போய் மெயின் போஸ்ட்லேர்ந்து வர டெலிபோன் வயரயும், கீழே டெலிபோன் கிட்ட ஜாயின் ஆகிற வயரையும் மொதல்ல இணைக்கலாம் போனேன்.. கீழ போன் கிட்ட போற வயர கத்திய வச்சு கிழிச்சா அதுக்குள்ள ஆறேழு வயர்கள்.. அதுல நாலு வெள்ளை.. சரி குழப்பமே இல்லாம இருக்கட்டும்னு ஒரு பச்சை வயரையும், நீல வயரையும் மாடிலயும் கீழயும் கனெக்ட் பண்ணிட்டு பெருமையோட கீழ வந்தா, அத விட பெருமை முகத்தோட இவர் என்னயப்பார்த்து, "என்ன முடிச்சுட்டயா" போன எடுத்துப்பார்த்தா இன்னும் உயிர் வரல... "அதுக்குத்தான் டெலிபோன் ஆள வந்து பாக்கச்சொன்னேன்" _ மாமியார்.. நடுவில் வந்த எலெக்ட்ரீஷியனும், இதெல்லாம் டெலிபோன் டிபார்ட்மெண்ட் வந்து பார்க்கனும்னு சார்னு சொல்லிட்டு போய்ட்டான்... எல்லாம் சரியாத்தானே பண்ணிணோம் ஏன் வரலைன்னு , ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும், கத்தியும் கையுமா மாடிக்கும் கீழுக்கும் அலஞ்சு ஒண்ணும் நடக்கல .. இன்னிக்கி திடீர்னு ஒரு ஸ்பார்க் அடிச்சது .. மாடியில் டெலிபோன் போஸ்ட்லேர்ந்து வந்த வயர அறுந்து போய்டக்கூடாதுன்னு, ரொம்ப பாதுகாப்பா, முதலில் தனித்தனியாக ரெண்டு வயரயும் கனெக்ட் பண்ணி அப்ப்புறம் ஒட்டுமொத்தமாக எல்லாத்தயும் முறுக்கு முறுக்குனு முறுக்கி வச்சுருக்கேன்.. அத ஃப்ரீயா வீட்டு ரெண்டு வயர மட்டும் கனெக்ட் பண்ணினனா, மேட்டர் ஓவர்.... இப்ப என்ன தொல்லன்ன, டி.வி , கம்ப்யூட்டர் எது ரிப்பேர்னாலும் என்னயே தொல்ல பண்ணுவாங்க.. எப்படி சமாளிக்கறதுன்னு புரியல..

பரீட்சை

காலை எழுந்திருக்கும் போதே ஒரே அசதி… தலை வலி. சரியாக தூங்காதது காரணமாக இருக்கலாம். முதல் நாள் கேள்விப்பட்ட ஒரு செய்தி இரவு தூங்க விட வில்லை. நேற்று, முன்பு என் வீட்டின் அருகில் குடி இருந்த பெண்மணியை பார்த்தேன்… முதலில் அவள் என்னை தவிர்த்த மாதிரி தெரிந்தது.. பிறகு நானே வலிய சென்று பேசிய பின் முதலில் தயங்கி தயங்கி பேசி பின் வீட்டுக்கு வரச் சொன்னாள்… எனக்கும் வீட்டில் முக்கிய வேலை எதுவும் இல்லாததால் அவளுடன் சென்றேன். அங்கே, அவளுடைய மகள் பெட் ரூம்ல தூங்கிக்கொண்டு இருந்தாள்… நான் அவர்களை சந்தித்து நாலு வருஷம் இருக்கும். அப்பத்தான் அவ பொண்ணு பத்தாவது பாஸ் பண்ணி இருந்தாள்.. ஸ்கூல் ஃஃபர்ஸ்ட்… ரொம்ப சந்தோஷமாக இருந்தாள்… ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஒன்றாம் வகுப்பில் இருந்து க்ளாஸில் முதலில் வரும் பெண்தான். அவர்களுக்கு ஒரே பெண் குழந்தை அவள்.. கணவன், மனைவி இருவருக்கும் அவள் மட்டும்தான் உலகம். படிப்பு, படிப்பு படிப்பு…. விளயாடக் கூட அதிகம் விட மாட்டார்கள்.. அப்படியே சில சமயம் அனுமதித்தாலும், அம்மா, அப்பா கூடவே இருப்பார்கள்.. அதுவும் சமத்துக் குழந்தையாய் அம்மா அப்பாவ சொல் படி கேட்டு முதல் மதிப்பெண்ணே வாங்கி வந்தது.. அதனால் இந்த ரிஸல்ட் நான் எதிர்பார்த்ததுதான். அப்ப வாழ்த்தி விட்டு போன பின் இப்பத்தான் சந்திக்கிறேன். “என்ன… ஐஸ்வர்யாக்கு காலேஜ் இல்ல” நான் கேட்டதுதான் தாமதம்… அந்த பெண் பெருசா அழ ஆரம்பித்து விட்டாள்.. எனக்கு ஒண்ணும் புரியவில்லை.. சத்தம் கேட்டு ஐஸ்வர்யா வெளில வந்து அவ அம்மாவ மலங்க மலங்க பார்த்துட்டு ஒண்ணும் பேசாமல் உள்ளே போய் கதவை சாத்திக் கொண்டு விட்டாள்… எனக்கு டென்ஷனாயிடுத்து… மெதுவாக அவள் தோளத் தொட்டு, “என்ன ஆச்சு” “நிறைய நடந்து போச்சு.. எங்க இருந்து ஆரம்பிக்கறதுன்னு தெரியல” “முதல்ல தண்ணி குடிங்க, அப்புறம் பேசலாம்” என்று சொல்லி ஃப்ரிஜ்ஜைத் திறந்து தண்ணி பாட்டிலை அவளிடம் கொண்டு வந்து கொடுத்தேன்.. மட மடவென்று தண்ணிய குடிச்சுட்டு, முகத்த தொடச்சுண்டு ஆரம்பித்தாள்… ”இவள ப்ளஸ் ஒன் அதே ஸ்கூல்ல சயன்ஸ் க்ரூப்ல சேர்த்தோம்… எங்களுக்கு அவள டாக்டராக்கனும்னு ஆச… மொதல்ல க்ளாஸ் டெஸ்ட் நல்லா செஞ்சா எப்பவும் போல… குவார்ட்டர்லி எக்ஸாம்ல, ஏன்னு புரியல.. ஃபிஸிக்ஸ்ல ஃபெயில் மார்க் வாங்கிட்டா… எங்களுக்கு ரொம்ப ஷாக்கா ஆயிடுத்து.. அவளுக்கும்தான்.. நாங்க இன்னும் அதிகமா ப்ரெஷர் கொடுத்து படிக்க சொல்லிண்டே இருந்தோம்… அவளும் ராத்திரியும் லேட்டா கண் முழிச்சு, காலைலயும் சீக்கிரம்மா எழுந்து ரொம்பவே கோவாப்பரேட் பண்ணிதான் படிச்சா… என்னனு தெரியல, அவளுக்கு எப்பப்பாரு ஒரு பயம், படிச்சது மறந்துடுமோன்னு… அதே போல்தான் ஆச்சு.. ஹாஃப் இயர்லில மேத்ஸ், ஃபிஸிக்ஸ், கெமிஸ்ட்ட்ரி மூணுலயும் ஃபெயில் ஆயிட்டா… நாங்க ரொம்ப ஆடிப் போயிட்டோம் என்ன பண்றதுன்னே புரியல… அதுக்குள்ள இன்னொரு ஷாக்.. அவ புஸ்தகம் கிட்ட போகவே பயப்பட ஆரம்பிச்சா.. ஸ்கூல் போகனும்ன ஒரு அழுகை.. கட்டாயப்படுத்தி ஸ்கூல் அனுப்பிட்டு, ஸ்கூல் வாசல்லயே காத்துண்டு இருப்பேன், முக்கால்வாசி நேரம் அவ ரொம்ப அழறா வந்து கூட்டிட்டு போங்கன்னு கால் வரும்… அப்படியே மார்ச் மாசம் வந்தது.. கெஞ்சி தாஜா பண்ணி கொஞ்சம் கொஞ்சமா பக்கத்துல உக்கார்ந்து படிக்க வச்சு எக்ஸாம்க்கு ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி நானும் அவ எக்ஸாம் எழுதற ரூம் வாசல்ல போய் வெயிட் பண்ணினேன்… எக்ஸாம் கொஸ்டின் பேப்பர கொடுத்த உடனயே, பயந்துண்டு அழுதுண்டே ஓடி வந்துட்டா… அப்புறம் மத்த பரீட்சைலாம் எழுதல…. பிறகு எஜுகேஷன் கவுன்சிலர் கிட்ட அழச்சுட்டு போய் கொஞ்சம் இம்ப்ருவ்மெண்ட்.. படிக்க பயம் குறைஞ்சுருக்கு… அவள அப்படியே ஃப்ரீயா கொஞ்ச நாள் விடுங்க.. அப்புறம் அவளே தெளிவாகி வருவாள்னு சொல்லி இருக்காங்க… அவ கூட படிச்சவங்க எல்லாம் இப்ப காலேஜ் படிக்கறாங்க.. இவளப் பாருங்க இப்படி பிரம்ம பிடிச்ச மாதிரி இருக்கா.. உங்கள கூட அடையாளம் தெரியல பாருங்க… ஒரு வருஷமா வீட்ட விட்டே எங்கயும் போகாதிருந்தேன்… இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா வெளில தலைய காமிக்கறேன்… இவர் நடை பிணமா ஆபிஸ் போய் வந்து கொண்டிருக்கார்.” நானும் ஸ்தம்பித்துத்தான் போனேன். சிறிது நேரம் அவளுடன் பேசி எல்லாம் சரியாகி விடும் என்று ஆறுதல் சொல்லி விட்டு ஐஸ்வர்யாவை தொந்தரவு செய்ய மனம் இல்லாமல் அவள் ரூமை பார்த்துக் கொண்டே விடை பெற்று வந்து விட்டேன்… இரவு முழுக்க இதுவே மனதில் ஓடிக் கொண்டிருந்ததால் சரியான தூக்கம் இல்லை…. “என்னம்மா நாழியாச்சே எழுந்து காபி போடலயா” இவர் குரல் கேட்டு எழுந்து வேலைகளை ஆரம்பித்தேன் சாயங்காலம் காலேஜ்ல இருந்து வந்த மகன் தயங்கி தயங்கி நின்றான்.. “என்னடா” “வந்து….. நேத்தே செம் ரிஸல்ட் வந்துடுச்சு… “ குறுக்கே வந்த கணவர், “ இல்லம்மா நேத்தே என் கிட்ட சொல்லிட்டான்.. நீ வெளில போய்ட்டு டயர்டா வந்தியா அதான் அப்புறம் சொல்லிக்கலாம்னு…..” நான் அவனை பார்த்து, “சொல்லு” “ அது…. ஒரே ஒரு பேப்பர்ல …… மட்டும் அரியர் மா” “அதுனால என்ன கண்ணா அடுத்தாப்ல எழுதி க்ளியர் பண்ணிக்கலாம்” என்ன ஆச்சு இவளுக்கு என்ற குழப்பத்துடன் இவரும், எஸ்கேப்பான சந்தோஷத்துடன் அவனும் இடத்தை காலி பண்ணினார்கள்.
சும்மா மாலுக்கு போனப்ப ஒரு அப்பா பண்ணின அலும்ப பார்த்து எழுதினது எதிரில் அமர்ந்து ஆசையாக தான் கேட்ட சாக்லேட் கேக்கை எடுக்கப் போன மூன்று வயது மகனையும், அவனை கேக்கை தொட விடாமல் கையில் ஸ்பூனையும் ஃபோர்க்கையும் கொடுத்து எப்படி சாப்பிடனும்னு க்ளாஸ் எடுக்கும் கணவன் அருணையும் வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் ஸ்வேதா... சிறிது வாய்க்கு வெளியே வந்தாலும் டிஷ்யூ வைத்து தொடைத்து விட்டுதான் அடுத்து சாப்பிட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தான்... அவன் அப்படித்தான்... எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு முறை, நாசுக்கு ... அதனால் ஒரு வேலையை முடிக்க தாமதமானாலும் பரவாயில்லை... மணமான புதிதில் பைக்கில் ஏறி ஆசையாக அவன் இடுப்பை வளைத்து பிடித்தபடி அமர்ந்தவுடன், "எதுக்கு இப்ப சட்டையை கசக்கற .. பின்னால ஹேண்டில் இருக்கு அத பிடிச்சுக்கோ" தரையில உட்காரக் கூடாது, சேர், சோபாலதான் உட்காரனும் ... எல்லா பொருட்களும் அந்தந்த இடத்தை விட்டு சிறிதும் இடம் மாறக் கூடாது... சோஃபால சிட்டிங் போஸ்ட்சர் மட்டும்தான்... கொஞ்சம் ரிலாக்ஸ்டா காலை நீட்டி சாயக் கூடாது.. "ஓ மை காட்... மாம்ஸ் என்ன பண்றீங்க" என்ற சத்தமான குரல் கேட்டு நிமிர்ந்தாள்... அருணுடைய அக்கா மகன் ஆகாஷ்... ப்ளஸ் டூ படிக்கறான் . "மாம்ஸ் குழந்தைய ஃப்ரீயா விடுங்க" என்றவன் ரிஷபை தூக்கிக் கொண்டு போய் நன்றாக கை கழுவி விட்டு, மீண்டும் கேக் முன்னால் உட்கார வைத்து, "குட்டி பையா இப்ப கையால எடுத்து சாப்பிடு" என்றான்.. "டேய் என்னடா பண்ற, அவன் கை முழுக்க கிரீமாயிடும். அதோட முகம் சட்டை எல்லாம் கேக் ஆக்கிடுவான்.. பாக்கவே அசிங்கமா.." "என்ன மாம்ஸ் இப்படி சொல்றீங்க, குழந்தை கேக், ஐஸ்க்ரீமெல்லாம் முகம் முழுக்க அப்பிக்கறது எவ்வளவு அழகு தெரியுமா .. ஃப்ரீயா விடுங்க மாமா.. கைய சுத்தமா கழுவி விட்டுட்டு சாப்ட வைங்க.. விளையாடற நேரத்துல விளையாட விடுங்க... ரொம்ப மிலிட்டரி ரூல் இருந்தா லைஃப்ல எதையுமே ரசிக்க முடியாது... சரி மாம்ஸ் ஃப்ரெண்ட்ஸ் வெயிட் பண்றாங்க .. ரொம்ப ஹெக்டிக்கா இருக்கு ஸ்டடிஸ்னு ஃப்ரெண்ட்ஸ்லாம் ஒரு ப்ரேக்குக்காக இங்க மாலுக்கு வந்தோம்... இங்க உங்களப் பார்த்த உடன ஹாய் சொல்லிட்டு போலாம்னு வந்தேன்... பை மாம்ஸ், பை ஆண்டி, பை பை குட்டி பையா" சிரித்தபடியே வெளியே காத்திருந்த நண்பர்களுடன் சென்று விட்டான்.. "அட இந்த சின்ன பையனுக்கு தோணினது தனக்கு தோணவில்லையே, குறந்தபட்சமாகக் கூட அருணுக்கு புரிய வைக்க நான் முயற்சிக்கவில்லயே" என்று நினைத்தபடியே கணவனை பார்த்தாள்.. அவன் அமைதியாக இருந்தான். யோசிக்கட்டும்.. தெளிவு பிறக்கும்..