Thursday, March 12, 2009

இன்றைய சமுதாயம்

மார்ச் மாதம் , தேர்வுகள் வந்தாச்சு. பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிகள் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்ளும் செய்திகளும் அதிகமாகி விட்டது. இது வருடா வருடம் தொடர்கிறது. வாய்ப்புகள் அதிகம் இருக்கும் இந்த கால கட்டத்தில் இளம் சமுதாயத்தினருக்கு தன்னம்பிக்கை இல்லாமல் போவது துரதிர்ஷ்டமான விஷயம். இவர்களுக்கு தக்க கவுன்சிலிங் முதலிலிருந்தே செய்ய வேண்டியது பெற்றோரின் கடமை. என்ன, அதற்கு முன்னால் அவர்கள் தெளிவாக இருக்க வேண்டும். நாம் இந்த செய்திகளை படித்து விட்டு ஐந்து நிமிடம் அநுதாபப் பட்டு விட்டு அடுத்த செய்திக்கு போய் விடுகிறோம். நாட்டுல செய்திகளுக்கா பஞ்சம்.

எனக்கு தெரிஞ்சு 20 வருடம் முன்னால் எங்கள் அடுத்த வீட்டு பையன் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு முன்னால் (பிப்ரவரி என்று நினைக்கிரேன்) காணாமல் போனான். தேடாத இடம் பாக்கி இல்லை. சரியாக ஒரு வருடம் கழித்து அவன் திருச்சி பஸ்டாண்டில் திரு திரு என்று முழித்துக் கொண்டிருப்பதை எங்கள் தெருவில் உள்ள ஒருவர் பார்த்து விட்டு குரல் கொடுத்திருக்கிறார். முதலில் பயந்து ஓடியவன் பிறகு வந்திருக்கிறான். ஊரெல்லாம் சுற்றி விட்டு வீடே தேவலை என்று வந்திருக்கிறான். ஆனால் அப்பா, சித்தப்பாக்கள் டின் கட்டுவார்களோ என்று பயம். அப்புறம் அவனை சமாதானப் படுத்தி வீட்டில் இருப்பவர்களுக்கு செய்தி தெரிவித்து அவனை அவர்களிடம் ஒப்படைத்தாகிவிட்டது. இப்பொழுது மணமாகி நன்றாக இருப்பதாக கேள்வி. எல்லோருக்கும் ஒரு வழி பிறக்காமலா போகும்?